இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் இருவருக்குப் பகிர்ந்து வழங்கப்படுவதாக நோர்வே விருதுக் குழு அறிவித்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ஊடகவியலாளர் மரியா ரெஸ்ஸா (Maria Ressa) ரஷ்ய ஊடகவியலாளர் திமித்ரி முரட்டோவ் (Dmitry Muratov) ஆகிய இருவருக்குமே தத்தமது நாடுகளில் கருத்துச் சுதந்திரத் தைக் காப்பாற்ற நடத்திவரும் துணிச்சல் மிக்க போராட்டத்துக்காக இந்த உயர் விருது வழங்கப் படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் உலகெங்கும் இதே நோக்கங்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்ற அனைத்து ஊடகவியலாளர்களையும் பிரதிநிதித்துவப் பbடுத்தியே இவர்கள் இருவருக்கும் விருது வழங்கப் படுவதாகவும் நோபல் விருதுக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
58 வயதான பெண் ஊடகவியலாளர் ரெஸ்ஸா பிலிப்பைன்ஸில் போதை ஒழிப்பு என்ற பெயரில் சொந்த மக்கள் மீது அந்நாட்டின் அதிபர் தொடுத்துள்ளபோரை ஒத்த வன்முறைகளை வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தியவர்.
2012 ஆம் ஆண்டில் அவர் இணைந்து ஆரம்பித்த “Rappler” என்னும் டிஜிட்டல் ஊடக நிறுவனம்(digital media company) மூலம் புலனாய்வு ஊடகவியலை முன் னெடுத்து வருகிறார்.
பிலிப்பைன்ஸில் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேயின் (Rodrigo Duterte) அதிகாரம் நடத்திவருகின்ற சர்ச்சைக்குரிய போதை ஒழிப்புப் போர் நடவடிக்கைகள் மீது கவனத்தைக் கவரும் விதமாக அறிக்கைகளை வெளியிட்டவர். அத்துடன் சமூகஊடகத் தளங்கள் எவ்வாறு பொய்ச் செய்திகளைப் பரப்புவதற்கும் எதிராளிகளைகுறி வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன என்பதையும் ஆவணப்படு
த்தியுள்ளார்.
அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான ரெஸ்ஸா முன்னர் சிஎன்என் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார். 59 வயதான முரட்டோவ் (Muratov) ரஷ்யாவில் கருத்துச் சுதந்திரத்துக்காகப் பலதசாப்தங்களாக அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் செயற்படுபவர் என்று விருதுக் குழு தெரிவித்துள்ளது.
ஆட்சியாளரை விமர்சிக்கும் “நொவயா கெஸற்றா” (Novaya Gazeta) என்னும் பத்திரிகையை 1993 இல் ஆரம்பித்த அவர், 1995 வரை அதன் பிரதம ஆசிரியராகவிளங்கியவர். அச்சுறுத்தல்கள், மரண எச்சரிக்கைகள், கொலைகள் எனப் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்துவருகின்ற “நொவயா கெஸற்றா” ஊடகம் இதுவரை அதன் பணியாளர்கள் ஆறுபேரை இழந்துள்ளது.
செச்சினிய யுத்தம் தொடர்பாகக் கட்டுரை வரைந்த அன்னா பொலிட்கோவ்ஸ்கயா(Anna Politkovskaya) என்பவரும் கொல்லப்பட்டவர்களில் ஒருவராவார்.
கொலைகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் முரட்டோவ் தனது பத்திரிகையின் சுயாதீனக் கொள்கைகளைக் கைவிட மறுத்து வருகிறார் -என்று நோபல் விருதுக் குழு தெரிவித்திருக்கிறது.
மரியா ரெஸ்ஸா (Maria Ressa) திமித்ரி முரட்டோவ் (Dmitry Muratov) ஆகிய இருவரும் 1935 இல் ஜேர்மனிய ஊடகவியலாளர் Carl von Ossietzky என்பவருக்குப் பின்னர் நோபல் சமாதானப் பரிசைப் பெறுகின்ற ஊடகத்துறை சார்ந்தோர் என்னும் பெருமையைப் பெறுகின்றனர்.
நோபல் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் டிசெம்பர் 10 ஆம் திகதி- அல்பிரட் நோபலின் நினைவு தினத்தன்று- நடைபெறவுள்ளது. சுவீடன் நாட்டின் கைத்தொழில் துறை யாளர் அல்பிரட் நோபல் (Alfred Nobel) 1895 இல் ஆரம்பித்த இந்த விருதுகள் உலகில் மிகவும் மதிப்பு மிகுந்த உயர் கௌரவமாகக் கருதப்படுகின்றன.
குமாரதாஸன். பாரிஸ்.
08-10-2021