இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே இன்று (13) முற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில் சந்தித்தார். இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக பிரதமரிடம் குறிப்பிட்ட ஜெனரல் நராவனே நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இவ்விஜயத்தின் போது ஜெனரல் நராவனே அனுராதபுரம் திசாவௌவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை செயலணி பயிற்சி பாடசாலைக்கு ஓட்டுனர் மற்றும் துப்பாக்கிச் சுடல் பயிற்சிகளுக்காக பயன்படுத்தக்கூடிய மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாட்டிற்காக சேவையாற்றிய பின்னர் படைவீரர்களை கண்காணித்து பராமரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.