சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (21.10.21) கட்டளையிட்டது.
அதேபோல அந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த கைதிகள் எண்மரையும் வேறு சிறைக்கு உடனடியாக மாற்றுமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, உயர்நீதிமன்றம்
கட்டளையிட்டுள்ளது.
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, செப்டெம்பர் 12 ஆம் திகதி, மதுபோதையில் தனது சகாக்களுடன் அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, அதிலிருவரை முழந்தாலிடச் செய்து, தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுத்தள்ளிவிடுவேன் என மிரட்டினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை மட்டும் செப்டெம்பர் 15ஆம் திகதியன்று திறந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில், தமிழ் அரசியல் கைதிகள் எண்மரும் தங்களுடைய சட்டத்தரணியூடாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
அம்மனுவை, நேற்று (21.10.21) ஆராய்ந்த போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுவிடுவேன் என அச்சுறுத்தியமை, அடிப்படை உரிமை மீறலாகும்.
அதற்கு நட்டஈடு கோரியுமே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் குழும் முன்னிலையில், ஆராயப்பட்டது.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தற்போது இருக்கும் தமிழ் அரசியல் கைகளான பூபாலசிங்கம் சூரியபாலன், மனியராசன் சுலக்ஷன்,கணேவன் தராஜன், கந்தப்பு கஜேந்திரன், ராசதுறை சின்னுராசன், மெய்யமுத்து சுனதரன், டி.கந்தரூபன் ஆகியோரே இந்த அடிப்படை
உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுர சிறைச்சாலையின் அதிகார் எம்.எச்.ஆர் அஜித், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயம் எச்.எம்.டி.என் உபுல்தெனிய, நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சம்பவத்துக்கு முகங்கொடுத்திருந்த கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து வட மாகாணத்திலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு தங்களை மாற்றுவதற்கான இடைக்கால
கட்டளையை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரியிருந்தனர்.