Home இலங்கை இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனப் பாகுபாடு அதிகரிக்கிறது!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனப் பாகுபாடு அதிகரிக்கிறது!

by admin

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சிறுபான்மை இனங்களை வெளிப்படையாக இலக்கு வைத்து அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதில் ஓர் உச்சகட்டத்தை இலங்கை அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழுமையான விவரத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

“வீடுகளை எரிப்பது முதல் உடல்களை எரிப்பது வரை இலங்கையில் சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், இனப்பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியவை, 2013 முதல் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வினை அடைந்துள்ளது,” எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பாகுபாடு, தண்டனைகளின்றி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கும்பல் தாக்குதல்களிலிருந்து பரிணமித்தது எனலாம். இந்த பாகுபாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க கொள்கைகளான கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களை கட்டாயமாகத் தகனம் செய்தல் மற்றும் நிகாப் (முகத்திரை), மதரசாக்கள் (மத ரீதியிலான பள்ளிகள்) ஆகியவற்றை தடை செய்யும் தற்போதைய முன்மொழிவுகளும் அடங்கும்’ என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் குறிப்பிட்டுள்ளது.

“இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு ஒன்றும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்நிலைமை கூர்மையடைந்துள்ளது எனலாம். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள், அதிகார தரப்பின் மறைமுக அங்கீகாரத்துடன் அடிக்கடி பல்வேறு ஆபத்தான அளவுகளில் நிகழ்ந்துள்ளன.

அத்துடன், முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே விரோதமாகக் காணப்படும் தற்போதைய அரசாங்கத்தின் சொல்லாட்சி மற்றும் கொள்கைகளும் சேர்ந்துகொண்டுள்ளன” என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் கைல் வார்ட் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தான போக்கை நிறுத்தி, முஸ்லிம்களை மேலும் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதுடன், குற்றவாளிகளை பொறுப்பாக்குவதும், முஸ்லிம் சமூகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும், துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வரவும் வேண்டும்,” எனவும் அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் விரோதம்

முஸ்லிம்கள்

“தாக்குதல் நடத்தியோர் மற்றும் வெறுப்புப் பேச்சுக்குப் பொறுப்பானவர்கள் தங்கள் செயல்களுக்குரிய தண்டனை இன்றி அனுபவிக்கும் சலுகை மூலமாக, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 2013 முதல் பல்வேறு படித்திறன்களில் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த அதிகரித்த விரோதமானது – இஸ்லாமிய மதம் மற்றும் பழக்கவழக்கங்களின்படி, முஸ்லிம்களின் நுகர்வுக்கு அனுமதிக்கப்பட்ட உணவைக் குறிக்கும் ‘ஹலால்’ சான்றிதழை முடிவுக்கு கொண்டுவர சிங்கள பௌத்த தேசியவாத குழுக்கள் வெற்றிகரமாக முயன்றபோது தொடங்கியது. குறித்த ‘ஹலால்’ சான்றிதழுக்கு எதிரான பிரசாரமானது பல பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வணிகங்கள் மீது தாக்குதல்களுக்கு வழிவகுத்தது. தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கான பொறுப்புக் கூறல் தொடர்பாக காணப்பட்ட அசட்டை, முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தண்டனையின்றி வன்முறையில் ஈடுபடலாம் என்பதற்கான ஒரு சமிக்ஞையை வழங்கியது.

அடுத்த ஆண்டு, தெற்கு கடலோர நகரான அளுத்கமவில் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதக் குழு பேரணி நடத்திய பின்னர், முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் தொடங்கியது. இங்கும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் தண்டனையை அனுபவிக்கவில்லை. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.

சிறுபான்மையினருக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த ஒரு புதிய அரசாங்கம் 2015 இல் இருந்தபோதிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தன. தேர்தலுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டில் தென்னிலங்கை நகரமான ஜிந்தோட்டவில் முஸ்லிம் விரோத வன்முறை வெடித்தது. அதே நேரத்தில் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள திகன மற்றும் அம்பாறை ஆகிய நகரங்களில் இதேபோன்ற வன்முறை 2018 இல் நடைபெற்றது. குற்றவாளிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பியது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் போலீசாரும் ஆயுதப்படையினரும் போதிய பாதுகாப்பை வழங்கவில்லை அல்லது வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.”

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின் அதிகரிப்பு

முஸ்லிம்கள்

“இஸ்லாமிய அரசால் (ஐ.எஸ்) உரிமை கோரப்பட்ட உள்ளூர் இஸ்லாமியக் குழுவால் 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பின்னர் முஸ்லிம்கள் மீதான விரோதம் கணிசமாக அதிகரித்தது.

இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி அன்று, இலங்கையின் வடமேற்கு மாகாணத்திலுள்ள பல நகரங்களில் முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான ரமலான் காலத்தில், முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர். நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன.

சமூக வலைதளங்களில் ‘வெறுப்பு பேச்சு’ பதிவுகள் மற்றும் முஸ்லிம் விரோதப் போக்குகள் காணப்பட்டன. தாக்குதல்களுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை தன்னிச்சையாக கைது செய்ய அதிகாரிகள் அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்தினர்.

பதவியேற்றதிலிருந்து, தற்போதைய அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசை திருப்ப – முஸ்லிம் மக்களை குறிவைத்து பலிகடா ஆக்கி வருகிறது.

கொரோனா காரணமாக இறந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கான கட்டாய தகன கொள்கையில் இது தெளிவாகத் தெரிந்தது. இறந்தோர் உடல்களை எரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ள நிலையில், கொரோனா காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதால் தொற்று மேலும் பரவும் என்பதை உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகள் இல்லாத போதும், கட்டாயமாக உடல்கள் எரியூட்டப்பட்டன.”

முஸ்லிம்களை இலக்காகக் கொண்ட அரசாங்கக் கொள்கைகள்

ஈஸ்டர் தினம்

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்புக்கு முன்னால் சர்வதேச அழுத்தம் அதிகரித்து, அரசாங்கம் அடிபணிந்த பிறகு, கட்டாய தகன கொள்கை மாற்றப்பட்டாலும், நிகாப் தடை மற்றும் மதரசா மீதான தடை உள்ளிட்ட பாரபட்சமான சட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கின்றனர். இவை நடந்தால் இலங்கையின் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட, மதத்தின் அடிப்படையிலான பாகுபாடுகளிலிருந்து விலக்களிக்கப்படும் சுதந்திரம் மீறப்படுவதோடு, சர்வதேச மனித உரிமை சட்டமும் மீறப்படும்.”

“முஸ்லிம்களை குறி வைப்பதற்காக, பயங்கரவாதத் தடை சட்டம் (PTA) உட்பட, தற்போதுள்ள சட்டங்களை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர், இது சந்தேக நபர்களை 90 நாட்கள் வரை குற்றச்சாட்டின்றி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைக்க அனுமதிக்கிறது. மேலும் இன மற்றும் மதவெறுப்பு பரவுவதைத் தடைசெய்யும் சட்டமான ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டம்’ தவறாகப் பயன்படுத்தப்படுவது, பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும்.”

“15 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் 16 மே 2020 அன்று கைது செய்யப்பட்ட கவிஞர் மற்றும் ஆசிரியர் அஹ்னாஃப் ஜசீம் உட்பட தனிநபர்களை குறிவைத்து இந்த சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பல வழக்குகளை இந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.”

“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், கட்டாய தகனங்கள் முதல் நிகாப் மற்றும் மதரஸாக்கள் வரை, இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக அப்பட்டமான பாரபட்சமான கொள்கை நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறது. தற்போது முன்மொழிவுகளாகவுள்ள திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும் இலங்கையில் சிறுபான்மை சமூகங்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமூகம் கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்றும் கைல் வார்ட் கூறியுள்ளார்.

என்ன சொல்கிறது இலங்கை?

அம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்த அறிக்கை தொடர்பில், இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரவிணவிடம் பிபிசி தமிழ் கருத்து கேட்டபோது ,”அரசாங்கம் அனைத்து சமூகங்களையும் ஒரே விதமாகவே பார்க்கிறது,” என்று கூறினார்.

“ஏனைய சமூகங்களுக்கு வழங்கும் அதே தகுதியை, முஸ்லிம் சமூகத்துக்கும் அரசாங்கம் வழங்குகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More