கதைசொல்லி சிவலிங்கம் மாமா என்றால் மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவராலும் போற்றப்படுபவர். அந்த வகையில் நானும் பாடசாலை மாணவியாக இருந்தபோது அவருடைய கதையை கேட்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. அப்போது எனக்கு வயது ஒன்பது தரம் நான்கில் மட்ஃகோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன், குறும்புத்தனமும் விளையாட்டுத்தனம் அதிகமாக காணப்பட்ட வயது அது. அப்போது எனது பாடசாலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து மாணவர்களும் இணைந்து மாணவ இலக்கிய மன்றம் என்கின்ற ஒரு நிகழ்வை வகுப்பாசிரியர் தலைமையில் மேற்கொள்வோம். என்னுடைய சக நண்பர்களும் ஆண் பெண் வேறுபாடின்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டுவோம்.
அப்போதுதான் ஒரு நாள் அன்று வெள்ளிக்கிழமை மிகவும் ஆர்வத்தோடு இருக்கும்போது ஆசிரியர் வந்து கூறினார் ‘இன்று உங்களுக்கு கதை சொல்ல ஒருவர் வந்திருக்கின்றார் எல்லோரும் வாருங்கள்’ என்று கூறி விட்டு சென்றார். அப்போது நாங்கள் அனைவரும் துள்ளிக்குதித்து எங்கள் பாடசாலை வாசலில் ஒரு பெரிய மரம் இருந்தது அந்த மரத்தின் கீழ் சென்று அமர்ந்ததும் வெள்ளை வேஷ்டி அணிந்து நீளமான சட்டை ( ஜிப்பா) அணிந்து ஒரு பெரியவர் அதிபரின் அறையினுள் அமர்ந்திருந்தார். அதுதான் நான் சிவலிங்கம் மாமாவை முதன் முதலில் பார்த்தேன் அந்த உருவம் இன்னும் எனது கண்களில் இருக்கின்றது . பின்னர் சிறிது நேரம் கழித்து எங்கள் முன் வருகின்றார், கதை கேட்பது என்றால் யாராக இருந்தாலும் சந்தோஷமாக இருக்கும் மிகவும் ஆர்வத்தோடு இருந்தோம் கைகளைத் தட்டி அவரை வரவேற்றோம். கையில் ஒரு புத்தகத்துடன் , எளிமையான ஒரு நடை , மிகவும் அழகாகவும் இருந்தார். முதலில் தன்னை அவர் அறிமுகப்படுத்திய விதம் புதுமையாக காணப்பட்டது. ஒரு சிங்கம் என அவர் தன்னை கற்பனை செய்து கொண்டு அவரை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் அவர் எங்களுக்கு முதன்முதலாக கூறிய கதை இன்னும் நினைவில் உள்ளது. ( கோடாரி கதை) அவர் கதை சொல்லும் அழகே தனிதான். கதை ஆரம்பம் தொடக்கம் முடிவு வரை சிரித்துக் கொண்டே இருந்தோம் அந்த அளவிற்கு அவர் எங்களை மகிழ்வித்தார் . கதையில் வருகின்ற ஒவ்வொரு பாத்திரங்களையும் அதே போன்று நடித்து , பாவனை செய்து , சத்தங்களை எழுப்பி, அவரே பாடல் பாடி , நடனமாடி கதையினை நகர்த்திச் செல்வார். இரண்டு கதைகள் சொல்லுவார் எங்களோடு மிகவும் கேலியும் கிண்டலுமாக கலந்துரையாடுவார். நேரம் செல்வது கூட தெரியாமல் இருக்கும் அவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவருடைய கதையை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனும் நிலை இருக்கும். மாணவர்களோடு மாணவராக அவர் மாறிவிடுவார்.
எப்போது அடுத்த வெள்ளிக்கிழமை வரும் என நான் மட்டுமல்ல சக நண்பர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம். அந்த வகையில் மிகவும் சிறப்பான ஒரு நபர் அவர். என்னால் மட்டுமல்ல என்னுடைய வயது சகநண்பர்களாலும் அவரையும் அவருடனான அனுபவத்தையும் மறக்கமுடியாது. சிவலிங்கம் மாஸ்டர் என்பதைவிட’ சிவலிங்கம் மாமா ‘ என்று சொன்னாலே முகத்தில் ஒரு சந்தோஷம் தோன்றும் .
இவ்வாறு கனிஷ்ட வகுப்பில் அவருடைய கதையை கேட்கும் அதிர்ஷ்டம் கிடைத்த அந்த திருப்தியோடு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிவிட்டு தரம் 06 இற்காக மட்ஃ மகாஜன கல்லூரி பாடசாலைக்குச் சென்று அந்த பாடசாலையிலும் மாணவர் மன்றம் இடம்பெற்றது. அதன்போது அனைவருக்கும் அவருடைய கதை கேட்கும் தரிசனமும் கிடைத்தது. அவரையும் அவருடைய கதையையும் கனிஷ்ட பாடசாலையோடு இழந்து விட்டேன் என கவலையோடு இருந்த சந்தர்ப்பத்தில்தான் இப்பாடசாலை அவருடைய சந்திப்பை மீண்டும் திருப்பி கொடுத்தது. மிகவும் சந்தோசம் அடைந்தேன். அதே உடல் தோற்றம் அதே அழகுடன் கண் முன்னே கதைசொல்லியாக தோன்றினார் சிவலிங்கம் மாமா.
கிட்டத்தட்ட க.பொ.த. உயர்தரம் வரையான காலப்பகுதி வரைக்கும் அவருடைய கதையை கேட்டு மகிழ்ச்சி அடையும் பாக்கியம் எனக்கு மட்டுமல்ல எனக்கு கீழ் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் அவருடைய கதையை கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிவலிங்க மாமா ஒரு வானொலி நாடக நடிகராகவும், பாடசாலை மாணவர்களையும் பாலர் பாடசாலை சிறார்களையும் சிறுவர் இல்ல சிறுவர்கள், வயோதிபர்கள் போன்றோரை கதை சொல்லி அவர்களுடன் அவரும் ஒரு சிறுவராக மாறி சுபாவம் கொண்டவர்.
எந்தவித ஆண் பெண் வேறுபாடின்றி சாதி, மத, இன பாகுபாடின்றி சூழ்நிலைகளுக்கும் சூழமைவுகளுக்கும் ஏற்றவாறு தன்னுடைய கதை கூறும் பாங்கினை நகர்த்திச் செல்லும் திறமை அவருக்கு மட்டுமே உரித்தானது. சிவலிங்க மாமா என்று அவருடைய பெயரை கூறினால் போதும் இனம் புரியாத மகிழ்ச்சி, சிரிப்பு முகத்தில் தானாகவே தோன்றும் அந்த அளவிற்கு அவர் அனைவரின் மனதில் இடம்பிடித்துள்ளார். மீண்டும் அவர் கதையை கேட்க முடியாதா அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று இன்றும் ஓர் ஏக்கம் என்னுள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
ஆனால் தற்கால சிறுவர்கள் இப் சந்தர்ப்பத்தினை இழந்து விட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் சிறுவர்கள் தற்போது கதை கேட்கும் சூழமைவில் இருந்து மாறிவிட்டார்கள். நாங்கள் சிறுவர்களாக சிவலிங்கம் மாமாவிடம் கதை கேட்ட காலம் வேறு தற்போதைய சிறுவர்கள் இருக்கின்ற காலம் வேறுஅனைத்தும் நவீனமயமாக்கல் ஆக மாறிவிட்டது. ஆனாலும் சிவலிங்கம் மாமாவின் இடத்தை யாராலும் மீள்நிரப்ப முடியாது. அது எவ்வளவு வருடங்கள் ஆனாலும் சிவலிங்கம் மாமா என்பது ஒருவர் தான், அவர் கதை சொல்லும் அழகே தனி தான்.
ஆனால் இன்றைய பாடசாலை மாணவர்கள் இந்த அதிர்ஷ்டத்தை, வாய்ப்பை தவறிவிட்டனர்.
மட்டக்களப்பில் அவரைப்போன்ற கதை சொல்லியை நான் இன்னும் காணவில்லை. நான் ஒரு பல்கலைக்கழகம் மாணவியாக இருந்தாலும் பல வருடங்கள் சென்றாலும் அவரை போன்ற மாமனிதரை இதுவரையில் காணவில்லை. அவருடைய பெயருக்கும் புலமைக்கும் யாருமே ஈடாக முடியாது. இன்று ஒரு பல்கலைக்கழக மாணவியாக நான் அவர் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவத்தை பகிர்வதில் மிகவும் பெருமை அடைகின்றேன் . சிவலிங்கம் மாமாவின் கதைகளை நான் மட்டுமல்ல இன்றைய தலைமுறையினரும் மிகவும் இழந்துவிட்டோம். எங்கிருந்தாலும் நலமோடும் சிறப்போடும் இருக்க இறைவனை பிராத்திக்கின்றேன்.
உங்கள் கதைசொல்லி அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவி
சிவஈஸ்வரன் சிஜானி
கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி.