ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தங்கியுள்ள விடுதிக்கு வெளியே பெருமளவிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப் விடுதிக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற் காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் விடுதியில் இருந்து வெளியேறி மாநாட்டு மண்டபத்துக்குச் செல்வதைத் தடுப்பதற்கு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் அப்பகுதியில் காவற்துறை பிரசன்னம் காணப்படுகிறது.
இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்த இன அழிப்புகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுவரும் கோட்டாபயவின் வருகைக்கு பல் வேறு வழிகளில் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற முயற்சிகளில் ஸ்கொட்லாந்தில்வசிக்கும் ஈழத் தமிழர்கள் கடந்த சிலநாட்களாக ஈடுபட்டுவருகின்றனர்.
இலங்கை அதிபரை ஓர் “இன அழிப்புக் குற்றவாளி” எனக் குறிப்பிடும் பிரசுரங்கள் மற்றும் பத்திரிகை விளம்பரங்கள் பல அங்கு வெளியாகியுள்ளன.
பருவநிலை மாநாட்டை ஒட்டி நடைபெறுகின்ற பக்க நிகழ்வுகளில் ஒன்றில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ நேற்று உரை நிகழ்த்தியுள்ளார். இலங்கை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் பேசியஅவர், சுற்றுச் சூழலைச் சீரழிக்காமல்விவசாயத்தில் புரட்சி செய்வது குறித்துவலியுறுத்தினார். சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்தாமல் விவசாய உற்பத்தியை மேம்படுத்த நவீன விஞ்ஞான நுட்பங்களையும் நடைமுறைகளையும் பயன் படுத்துவதே இப்போது நாம் எதிர்கொள்ளும் சவாலாகும். பல தசாப்தங்களாக, நீண்டகால சிறுநீரக நோய் இலங்கையின் விவசாய மையப்பகுதியில் ஒரு தீவிர பிரச்சினையாக உள்ளது. இரசாயன உர வகைகளின் அதிகப்படியான பாவனையானது இந்தப் பிரச்சினைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளது. இதன் பின்னணியில், இரசாயன உர இறக்குமதியைக் குறைப்பதற்கும், மாற்று வளங்களை வலுவாக ஊக்குவிப்பதற்கும் தமது அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.
01-11-2021