Home இலங்கை “காற்றில் கலந்த இசை” இசை வித்தகர் சிவசக்த்தி சிவனேசன்! குருவும் சிஷ்யையும் ஓர் அனுபவம்!

“காற்றில் கலந்த இசை” இசை வித்தகர் சிவசக்த்தி சிவனேசன்! குருவும் சிஷ்யையும் ஓர் அனுபவம்!

by admin

சிட்னியில் இருந்து கார்த்தியாயினி கதிர்காமநாதன்.


கடந்த ஞாயிற்றுக் கிழமை (31.10.2021) மதியம் கிடைத்த அந்தச் செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் நான் மீண்டு வரவில்லை. இறப்பும், பிறப்பும் உலக நியதிதான் அது யாருக்கு எப்போ நிகழும் என்பதும் யாம் அறியோம். ஆயினும் நீண்டகாலம் வாழவேண்டும் என நாம் நினைப்பவர்கள், குறுகிய காலத்தில் இவ் உலக வாழ்க்கையைத் துறக்கும் போது அந்த இழப்பை எம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இவ்வாறு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புகளில் ஒன்றாக உள்ளது திருமதி சிவசக்தி சிவனேசன் அவர்களின் இறப்பு.


எனது சங்கீத ஆசிரியர்களில் திருமதி சிவசக்தி சிவனேசனும் ஒருவர். திருமதி சிவசக்தி அவர்கள் சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு சென்னையிலிருந்து திரும்பியதும் இராமநாதன் அக்கடமியில் (தற்போது யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீடம்) விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தார்.


நான் இராமநாதன் கல்லூரி மாணவியாக இருந்த காலம் அது. கல்லூரியில் சங்கீதத்தை ஒரு பாடமாகக் கற்றதால் அந்தப் பாட அலகுகளைக் கற்றுக்கொள்வதற்கும் பரீட்சைக்கு என்னைத் தயார் செய்வதற்கும் பல நல்ல ஆசிரியர்களைத் தேடிச்சென்று கற்கவேண்டி இருந்தது. இவ்வாறு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குரிய பாட அலகுகளைப் பூர்த்தி செய்வதற்காகவே திருமதி சிவசக்தி சிவனேசன் அவர்களிடம் கற்கச் சென்றிருநதேன். ஆரம்பத்தில் பல மாணவியருடன் வகுப்பெடுத்தவர் பரீட்சையைக் கருத்திற் கொண்டு தனியாகவே பயிற்சி அளித்தார்.


இதை எழுதும் போது அவரிடம் படித்த அந்தக் கணங்களிலேயே வாழ்வது போன்ற நினைவுகள் என்னை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அவரிடம் கற்றவைகள் அனைத்தும் நினைவில் நிழலாடுகின்றன. கனிவும் கண்டிப்பும் நிறைந்த கற்பித்தற்திறன் கொண்டவர்.
பைரவியில் அடதாளவர்ணம் நாட்டை, ஸ்ரீ ஆகிய இராகங்களில் பஞ்சரத்தினக் கீர்த்தனைகள். மோகனம், பிலஹரியில் சௌக்ககாலக்கிருதி தரங்கம்பாடி பஞ்சநாத ஐயரின் ஆரபிமானம் வைத்தாதரிப்பார் என்னை, அம்புஜம் கிருஸ்ணாவின் கானமழை பொழிகின்றான் ஆகிய இராகமாலிகைக் கீர்த்தனைகள் தியாகையரின் கல்யாணியில் ஏத்தாவுனரா இப்படி அவரிடம் கற்றவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம்.


மூச்சு விட நேரமில்லாதபடி கற்றுத்தந்தார. அவற்றை வேகமாக மனனம் செய்து அட்சரசுத்தமாகப் பாடிக்காட்டவேண்டும். நாம் படிக்கும் காலத்திற் சமூகவலைத்தளங்கள் இருக்கவில்லை. வாய்ப்பாட்டுக் கச்சேரிகள் மிக அரிதாகவே இடம் பெறும். இந்திய, இலங்கை வானொலிகளில் இரவு ஒன்பது ஒன்பதரை மணிக்குப் பின்பே கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் இடம் பெறும் அவற்றைக் காத்திருந்து கேட்டே எமது கேள்விஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியிருந்த சூழல். ஆகையால் எமது சங்கீத அறிவை வளர்த்துக்கொள்ள முழுமையாக ஆசிரியர்களையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் மனம் வைத்தாற்தான் எமக்குச் சங்கீதம்.


திருமதி சிவசக்தி அவர்கள் அதற்கு இலக்கணமாக இருந்து முழுமனதோடு அக்கறையோடு சங்கீதத்தைக் கற்றுத்தந்தார். கற்பிக்கும் போது ஒருஸ்வரத்தில் இருந்து இன்னொரு ஸ்வரத்திற்கான பயணம், கமகங்கள், இராகத்தின் ஸ்வரூபம் தாளம், உருப்படியின் எடுப்புகள் ஆகியவை பற்றி அவர் பாடி விளக்கும் போதே மனதில் இருத்தினாற்தான் பின்னர் சரியாகப் பயிற்சி செய்ய முடியும.


தவிர இராகம் கற்பனா ஸ்வரம் பாடுவதற்கு ஜண்டை வரிசை, தாட்டு வரிசைகளிலமைந்த ஸ்வரக் கோர்வைகளையும் பாடி அப்பியாசித்தல் வேண்டும். இது அந்த வயதில் எனக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. இப்படித்தான் ஒருநாள் மைசூர் வாசுதேவாச்சாரியாரின் பிலஹரி இராகத்தில் அமைந்த ‘ஸ்ரீ சாமுண்டேஸ்வரி பாலயமாம்’ என்ற சௌக்ககாலக் கிருதியைக் கற்பித்தபின் பிலகரி இராக ஆலாபனையில் இறங்கிவிட்டார் அவர்பாடிய பின் என்னைத் தொடரும் படி சொன்னார் நானும் பாடினேன். இடையில் நிறுத்தி விட்டுக், கோபத்திற் பேச ஆரம்பித்து விட்டார் பாடும்போது எங்கே கவனம் போனது? இராகத்தின் ஸ்வரூபம் தெளிவாக விளங்குகிறதா? அகாரமாகப் பாடும் போது ஸ்வரஸ் தானங்கள் தெளிவாக உள்ளனவா? என்று சப்பல் பேச்சு.


நான் அழ ஆரம்பித்து விட்டேன். அந்த நேரம் அவருடைய தாயார் அங்கயற்கண்ணி அம்மையார் வந்து, உன்னுடைய கோபத்தை எல்லாம் ஏன் அவளிடம் காட்டுகிறாய்? நீ எழுந்திரு பிள்ளை இன்று போய் நாளை வா என்று என்னை வரம் தந்து காத்தார். அடுத்தநாள் நாள் நான் வகுப்பிற்குப் பயந்தபடி சென்றேன். இன்முகம் காட்டி என்னை அணைத்தபடி எங்கே வராமல் போய்விடுவாயோ என்று வருந்தினேன் நேற்று எனது கணவரின் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாந்தேன் அந்த வருத்தம் நீ பிழை விட்டதும் உன்னிலே அது திரும்பிவிட்டது என்றார்.


நான் படிக்கும் காலத்திற்தான் சிவசக்தி மிஸ்ஸிற்குப் பதிவுத் திருமணம் நடைபெற்றது. அவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். தொலைபேசி வசதிகள் இல்லாத காலம் கடிதத்திலேயே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. அடிக்கடி கடிதத்தை எதிர்பார்ப்பது. கேட்ட கேள்விக்குப் பதில்வரவில்லை என்று ஏங்குவது. கணவனுக்காகச் சுவையாகச் சமைக்கப்பழகுவது. அவருடைய அம்மாவுடைய தங்கைகளுடைய கிண்டல்கள் கேலிகளுடன் நடைபெறும் அந்தக் குதூகலம் நிரம்பிய நள பாகத்தில், அவ்வப்போது நானும் கலந்து கொண்டுள்ளேன்.


இப்படி அவரது மனம் தவிப்பில் இருந்த வேளை, நிறையச் சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறும். சில வேளை அவற்றிற்கான முறையீட்டுடன் அவரது அம்மாவிடம் குழந்தையாகச் சிணுங்குவது உட்பட பலர் அறிந்திராத அவரது குடும்பத்தாருக்கு மட்டுமே தெரிந்த அவருள் இருக்கும் ஒரு குழந்தையை, பருவமங்கையைக் காணும் பாக்கியமும் எனக்குக் கிட்டியது. அது ஒரு அற்புதமான காலம்.


இவ்வாறு படித்துக்கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் நீ வட இலங்கை சங்கீத சபைப்பரீட்சைக்குத் தோற்றுகிறாயா? என்று கேட்டார் இல்லை எனத்தலையசைத்தேன் ஏன்? என்றார். இரண்டையும் படிப்பது கடினமாக இருக்கும் என்றேன். இல்லை இதனோடு சில பகுதிகளே மேலதிகமாகப் படிக்கவேண்டும் நாளை முடிவு திகதி அதற்கும் விண்ணப்பி என்று எழுந்து சென்று விண்ணப்பப் படிவத்தைக் எடுத்துத்தந்து அதை நேரில் சென்று காரியாலயத்திற் சமர்ப்பிக்கச் சொன்னார்.


எனது தந்தையார் அதை அடுத்தாள் காரியாலத்திற் கொண்டு சேர்க்கும்வரை அவரிடம் வாங்கிய பேச்சு இனி ஜென்மத்திற்கும் சங்கீதம் வேண்டாம் எனத் தோன்றியது. இவை எல்லாவற்றையும் தாண்டி வட இலங்கைச் சங்கீதசபை தரம் ஐந்து பரீட்சைக்கும் என்னைத் தயார் செய்தார். க.பொ.த உயர்தரத்தில் சங்கீதத்திற்கு சித்தி கிடைக்குமா எனத்தவித்த எனக்கு 1981ஆம் ஆண்டு நடை பெற்ற உயர்தரப் பரீட்சையில் இராமநாதன் கல்லூரியிலேயே மிகச் சிறந்த பெறு பேறு (நான்கு பாடத்திலும்) பெற்ற மாணவியானேன். எனது பெற்றோருக்கு, எனது ஆசிரியர்களுக்கு, எனது பாடசாலைக்குப் பெருமைதேடித் தந்த அந்த நாளை என் வாழ் நாளில் என்றைக்கம் மறக்க முடியாது. இதில் சிவசக்தி மிஸ்ஸிற்குப் பெரும்பங்கு உண்டு.


உண்மைகளை நேருக்கு நேர் உரைப்பதால் பாடசாலைக் காலத்திலும் பல்கலைக் கழக்திலும் பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளேன். இதனால்; முன்னேற்றத்திற் பல பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன. ஆயினும் அவ்வாறான பல சந்தர்ப்பங்களிற் கிருஷ்ணபகவான் கீதையில் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும் போது நான் நிட்சயம் வருவேன் என்று கூறியது போலவே என் வாழ்க்கையிலும் பல தடவைகள் ‘நான் உண்மை கூறியதற்காகவா எனக்குத் தண்டனை’ என்று வருந்தும் போது எங்கிருந்தாவது இரண்டு கரங்கள் என்னைத் தூக்கி நிலை நிறுத்துவதற்காக நீளும். கல்லூரியில் அதிபரிடம் சில உண்மைகளைக் கூறியதால் ஏற்பட்ட விளைவுகளால் உடைந்து போயிருந்தபோது என்னைத் தூக்கி நிறுத்திய கரங்கள் குரு வடிவில் வந்த எனது அன்புக்குரிய சங்கீத ஆசிரியை சிவசக்தி சிவனேசனின் அன்புக் கரங்கள் கரங்கள்.
இந்தக் கணத்தில் அவர் குரல் என் காதுகளில் ரீங்காரமிடுகிறது அவர் பாடுகின்றார்
பௌளி
மயிலினம் கூவிட மயிலினம் ஆடிட
ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச
கோவலர் களித்திட கோபியர் ஆட
கோவிந்தன் குழலூ—-தி

மணிரங்கு
அம்பரந்தனிலே தும்புரு நாரதர் அ
ரம்பையரும் ஆடி பாடி மகிழ்திட
அச்சுதன் அனந்தன் ஆயர்குலத் திலகன்
அம்புஜ நாபன் ஆர்வமுடன் முரளி – கானமழை பொழிகின்றான் கண்ணன்

இப்போது நான் பாடுகின்றேன்

கானமழை பொழிகின்றான் கண்ணன்
சிவசக்தி சிவனேசன் தன்பதம் சேர்ந்தது கண்டு
கானமழை பொழிகின்றான் கண்ணன்—–

சிட்னியில் இருந்து, மாணவி திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More