மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் இராணுவம் மற்றும் காவல்துறையினா் இணைந்து மேற்கொள்ளும் சோதனை நடவடிக்கையால் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனைச் சாவடியில் வைத்து மன்னாரிலிருந்து வெளி இடங்களுக்கு செல்பவர்களும், வெளி இடங்களில் இருந்து மன்னாரிற்கு வருகின்றவர்களும் இராணுவத்தினரால் பலத்த சோதனைக்குட்படுத்தப்படுகின்றனா்.
குறிப்பாக வாகனங்கள் மற்றும் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இதனால் சிறு வியாபார நடவடிக்கைகள், மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், கு பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழலில் போதைப் பொருள் கடத்தல் பல்வேறு வகையில் பாதுகாப்பான முறையில் இடம் பெற்று வருகின்ற நிலையில் தமது அன்றாட தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக குறித்த சோதனை சாவடி பகுதி முழுவதும் மழை நீர் தேங்கிய நிலையில் காணப்படுகின்ற போதும் மக்களை மழை நீர் மற்றும் சேற்றுக்குள் இறக்கி கடுமையாக சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனா்.
மன்னாரில் இருந்து வியாபார நடவடிக்கை களுக்காக வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற சகல பொருட்களும் குறித்த சோதனைச் சாவடி பகுதியில் இராணுவத்தினரால் இறக்கப்பட்டு சோதனைகளுக்கு பின்னர் மீண்டும் ஏற்றப்படுகின்றது.
எனவே குறித்த சோதனை சாவடியில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்காத வகையில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியை அகற்றி அல்லது வேறு பகுதிக்கு மாற்றி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.