சூரன் போரில் சிலைகளுக்குப் பதிலாக மனிதர்கள். (ஈச்சந்தீவுக் கிராமத்தில் புதியதோர் மாற்றம்)
எமது வழிபாட்டு முறைகளில் முருக வழிபாடு என்பது இன்றியமையாத ஒரு அம்சமாகவே திகழ்ந்து வருகின்றது. இவ்வழிபாட்டு முறையின் ஒரு அம்சமாக முருகனுக்குரிய சிறப்பு மிக்க விரதமான கந்தசஷ்டி விரதமானது வருடந்தோறும் ஐப்பசி மாதத்தில் இந்துக்களால் அனுட்டிக்கப்படுகின்றது. ஆறு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி விரதத்தின் சிறப்பு வாய்ந்த ஒரு பகுதியாக அமைவது விரதத்தின் இறுதி நாளன்று மேற்கொள்ளப்படும் சூரன்போர் நிகழ்வாகும். இவ்விரத்தை அனுட்டிக்கின்ற பெரும்பாலான ஆலயங்களில் விரதத்தை நிறைவு செய்யும் பொருட்டு ஆறாவது நாளன்று சூரசங்காரம் எனப்படும் சூரன்போர் நிகழ்வானது நிகழ்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.
கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு சூரன்போரானது எமது கிராமமான ஈச்சந்தீவிலும் பல வருட காலமாக நிகழ்த்தப்பட்டுக்கொண்டு வருகின்றது. இந்நிகழ்வானது மிகவும் கோலாகலமான முறையில் எமது கிராம மக்களால் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் போது ஆற்றுகைத் தன்மையினையுடைய பல சுவாரசியமான விடயங்கள் இடம்பெறும். இவ்வாற்றுகையின் போது மூன்று சூரர்களுக்கும் சிலைகளையே அனைத்து ஆலயங்களிலும் பயன்படுத்திவருகின்றனர். எமது கிராமத்திலும் பலவருடங்களாக நடைபெறும் இந் நிகழ்விற்காக சிலைகளையே பயன்படுத்தினர். இருந்த போதிலும் 2016ம் ஆண்டு எவருமே எதிர்பாராத விதமாக பாரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. என்னவெனில் இவ்வாண்டு சூரன்போர் நிகழ்வின் போது எமது கிராமத்தில் சிலைகளுக்குப் பதிலாக மனிதர்கள் வேடம் தாங்கினார்கள். மூன்று சூரர்களுக்கும் எமது கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வேடம்தாங்கி புது விதமான ஒரு நிகழ்வை ஆலயமுன்றலில் நிகழ்த்தினார்கள்.
சூரனாக சிலைகளை இதுவரை காலம் கண்டு வந்த எமது சமூக மக்கள் முதல் தடவையாக மனிதர்கள் சூரர்களாக வேடம் தாங்கியதை காண்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதுவரை காலம் சூரன்போர் நிகழ்வில் சிலைகளைக் கண்ட எமக்கு அன்றைய தினம் மனிதர்களை சூரன் வடிவில் கண்டது ஒரு புதுவிதமான அனுபவத்தை ஏற்படுத்தியது.
எமது கிராமத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் கந்தசஷ்டி விரதத்தை முன்னிட்டு சூரன்போர் நிகழ்வானது இடம் பெறுவது வழமையான ஒரு விடயமாகும். ஆனால் 2016 நவம்பர் 05 அன்று ஆலய முன்றலில் சூரன்போர் நிகழ்வதற்கான எந்த ஏற்பாடுகளும் நடந்ததாக தெரியவில்லை. ஏனெனில் சிலைகள் அனைத்தும் உடைந்த நிலையில் காணப்பட்டது. அன்றை தினம் சூரன்போரிற்காக அவற்றை வடிவமைக்கும் பணியில் எவரும் ஈடுபடவுமில்லை. அதனால் அன்றைய தினம் சூரன்போரானது நடைபெறாது என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இருப்பினும் அன்று மாலை வேளையில் வீதியெல்லாம் திருவிழாக்கோலம் பூண்டுகொண்டது சிறுவர்கள்இ இளைஞர்கள்இ பெரியவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு கொண்டு வந்தனர். அவர்களின் பின்னால் ஒரு உழவு இயந்திரத்தில் சத்தம் கேட்க எல்லோரும் வெளியில் வந்து பார்த்த போது கற்பனை கூட செய்து பார்கக் முடியாத ஒரு விடயம் வீதியில் பவணி வந்து கொண்டிருந்தது. அது வேறு ஒன்றுமில்லை சூரர்களாக வேடம் தாங்கிய இளைஞர்கள் அவர்களைச் சுற்றி சிறுவர்களும் இன்னும் சில இளைஞர்களும் உழவு இயந்திரத்தில் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் எமது கிரமத்தில் உள்ள வீதிகளில் மாத்திரமின்றி அருகில் உள்ள கிராமத்து வீதிகளிலும் சென்று வந்ததனால் அந்தக் கிராம மக்களும் ஏராளமானோர் ஆலய முன்றலில் ஒன்று கூடினார்கள்.
சூரன்போர் நிகழ்வானது இடம் பெறுகின்ற போது இரண்டு குழுவினர் காணப்படுவர். அதில் ஒரு குழுவினர் முருகன் குழுவினராகவும் மற்றைய குழுவினர் சூரபத்மன் குழுவினராகவும் காணப்படுவர். சூரன் குழுவினர் சூரனின் சிலையைத் தாங்கிய வண்ணம் ஓடித் திரிவர் அதன்போது சிறுவர்களை விரட்டுதல்இ மக்கள் திரண்டு நிற்கின்ற இடத்திற்க்கு வேகமாக ஓடி வந்து பெரிய சத்தம் போட்டு அவர்களை விரட்டுதல் என பல விளையாட்டுக்களைப் புரிவார்கள். இந்நிகழ்வுகள் சுவாரசியமான ஒரு நகைச்சுவைப் பாங்கான செயற்பாடுகளாகக் காணப்படும்.
இவ்வாறான ஒரு செயற்பாட்டை சிலைகளைக் கொண்டு செய்வதிலும் விட மனிதர்களே வேடம் புணைந்து செய்தால் அது எவ்வாறான சுவாரசியமாக தன்மையில் இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் அவ்வாறான ஒரு அழகில் தன்மையோ அன்றைய தினம் எமது கிராத்து இளைஞர்களால் ஆலயமுன்றலில் அரங்கேற்றப்பட்டது. அவ் இளைஞர்கள் சூரர்களாக வேடம் புனைந்திருந்தாலும் அவர்கள் செயற்பாடுகள் நகைச்சுவைத் தன்மையுடையதாகவும்இ அனைவரையும் மகிழ்வூட்டும் செயற்பாடாகவும்இ அனைவரையும் கவரக்கூடய விதத்திலும் மிகவும் பிரம்மாண்டமானதாக அமைந்திருந்தது.
அவர்களின் வேடப்புணைவானது எமது பாரம்பரிய கூத்தாற்றுகைக்கான வேடப்புணைவை ஒத்திருந்தது. அத்துடன் ஒப்பனையானது கூத்தில் அரக்கர்கள் மேற்கொள்ளும் ஒப்பனையினை ஒத்திருந்ததது. அணிகலன்களாக கூத்தல் பயன்படுத்தும் லேட்டசுகளையே பயன்படுத்தியிருந்தனர். அத்துடன் உடல் முழுவதும் பச்சைஇ நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களிலான நிறப்பூச்சிகளை பூசியிருந்தனர். முக ஒப்பனையானது முறுக்கு மீசையும்இ பெரிய புருவங்களுடம்; காணப்பட்டது. தலையில் கிரீடம்இ கைகளில் தண்ணடாயும்இ அம்புஇ வில்இ வாள் என்பவற்றை ஏந்திய வண்ணம் வருகை தந்தனர். இவர்கள் வரும் போது மீசையை முறுக்கிக்; கொண்டும்இ பெரிய சத்தங்களை எழுப்பிய வண்ணமும்இ வாள் தண்டாயுதம் என்பவற்றைச் சுழற்றி சிறுவர்களை விரட்டிய வண்ணமும் வருகை தந்தனர்.
உழவு இயந்திரத்தில் வந்தவர்களை தாங்கிக் கொள்வதற்கான தட்டி வடிவிலான ஒரு அமைப்பினை ஏனைய இளைஞர்கள் செய்து வைத்திருந்தனர். அவர்கள் ஆலய முன்றலுக்கு வந்ததும் அவர்களை அந்த தட்டியில் தாங்கிக் கொண்டார்கள். அதில் அவர்கள் பிடித்து நிற்பதற்கான கம்பு கட்டப்பட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. வேடம் தாங்கியவர்கள் அதில் பொருத்தப்பட்ட கம்புகளைப் பிடித்த வணணம் நிற்க ஏனைய இளைஞர்கள் அவர்களைத் தாங்கிய வண்ணம் ஆலய முன்றலில் அங்கும் இங்குமாக ஓடிதிரிந்து பல சுவாரசியமான விளையாட்டுக்களைப் புரிந்தனர். அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடும் போது சூரர்களாக நிற்பவர்கள் மீசையை முறுக்கிய வண்ணம் பெரிய சத்தங்களை எழுப்பிக் கொண்டு அகோரச் சிரிப்புடனும் புண்முறுவலுடனும் அதில் நிற்பர். அவர்கள் தங்கள் நாக்கை வெளியில்க் காட்டி நாக்கைக் கடித்துப் பிடித்துக் கொண்டு வரும் போது சிறுவர்களை பயந்து ஓடுவார்கள்.
பின்னர் சூரன்போர் தொடங்கி முருன் அணியினர் உரிய இடம் வந்ததன் பிற்பாடு இரு சாராருக்குமான மோதல் இடம்பெறும். சிலைகளைக் கொண்டு தலையையும்இ ஆயுதங்களையும் மாற்றி மாற்றி இடம்பெறும் சூரன்போரைப் பார்த்த எமக்கு அன்றைய தினம் இடம்பெற்ற சூரன்போர் நிகழ்வானது புது அனுபவத்தைத் தந்தது. சிலைக்குத் தலைகளை மாற்றுவதற்குப் பதலாக இங்கு ஆட்களையே மாற்றினர். தாரகாசுரன்இ சிங்கமா சூரன்இ சூரபத்மன் ஆகிய மூவருக்கும் வேடம்தாங்கிய இளைஞர்கள் ஒவ்வொருவராக முருகன் அணியுடன் போர் புரிந்தனர்.
ஒவ்வொருவராக தட்டியில்தாங்கிக் கொண்டு இளைஞர்கள் ஓடுவர் போர் புரிவர் அந்நிகழ்வு பக்தி மற்றும் பரவச நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. சிலர் பக்தர்களாக நிற்க இன்னும் சிலர் பார்வையாளர்களாக நின்று பார்த்தது மகிழ்ந்தனர். முருன் அருகில் ஓடுவதும் மீண்டும் திரும்பி ஓடிவருவதும் பின்னர் இரண்டு அணியினரும் உரையாடுவதும் என பல சுவாரசியமான விடயங்கள் இடம்பெற்றன. அனைத்து விடயங்களும் ஒரு ஆற்றுகைக்கான அம்சங்களாகவே அங்கு வெளிப்படுத்தப்பட்டது. மூன்று சூரர்களும் மடியும் வரை இவ்வாறான பல அம்சங்கள் அங்கு அரங்கேறியது. இறுதியாக மூன்று சூரர்களும் மடிந்த பின்னர் அந் நிகழ்வு முடிவடைந்தது.
இது தொடர்பாக அவ் இளைஞர்களுடன் கலந்துரையாடிய போது இவ்வாறான ஒரு செயற்பாட்டை செய்ய வேண்டுமென அவர்கள் முன் ஏற்பாடு எதுவும் செய்து முடிவெடுக்கவில்லையாம்.
ஆலயாத்தில் சூரன் சிலைகள் உடைந்த நிலையில் காணப்பட்டமையினால் இவற்றை மீண்டும் வடிவமைப்பதற்கான காலம் போதாமையினாலும் எமது கிராமத்தில் வழமையாக நடைபெற்றுவரும் ஒரு விடயம் சிலை உடைந்த காரணத்தினால் நடைபெறாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவும் சூரன் போரை எவ்வாறவது நடத்த வேண்டும் என்பதற்காகவும் தாமே வேடம்தாங்கி அந்த செயற்பாட்டை முன்னெடுத்ததாகவும் தமது கருத்துக்களைக் கூறினார்கள்.
இவர்கள் கூறியவற்றை வைத்துப் பார்க்கின்ற போது இவ்வாறன சிந்தனைகள் என்பது ஒரு சாதாரண மனிதர் மத்தயில் அவ்வளவு எளிதினில் தோன்றிவிடாது. இவ்வாறான அழகியல் சிந்தனை தோன்றுவதற்கு கலைகளின் மீது ஆர்வமும் அதில் ஈடுபாடும் காணப்பட வேண்டும். இவ் ஈடுபாடும் ஆர்வமும் உள்ள எமது கிராமத்துக் கலைஞர்கள் மத்தியில் தான் இந்த உணர்வானது ஊற்றெடுத்தது. எமது கிராமத்தைச் சேர்ந்த சிவராசா லுகன் என்பவருக்கே இந் நிகழ்வை இவ்வாறாகச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை மனதில் தோன்றியது. இவர் கலைகள் மீது அதீத ஆர்வமுடைய ஒருவர் சிலை செய்தல்இ வர்ணப் பூச்சு வேலைகள் என்பவற்றில் புகழ்பெற்ற ஒருவர். அத்துடன் இவரின் சகோதரர்கள் இருவரும் இவரைப் போன்றே கலைகளின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர்கள் லுகன் என்பவரின் சிந்தனைக்கு இவரின் சகோரர்களும் இணைந்தே உயிர்கொடுத்தார்கள் எனக் கூற முடியும்.
இவர்களது இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் எல்லோருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூற முடியும். சிலைகள் உடைந்து விட்டதற்காக மரபுவழி நிகழ்வை கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காக தம்மை அர்பணித்து தமது திறமை மூலம் ஒரு அழகான திட்டத்தை வகுத்து எவரும் எதிர்பாராத ஒரு புது நிகழ்வை நிகழ்த்தியது என்பது உண்மையில் பாராட்டத்தக்க ஒரு விடயமே. இவர்களது இந்த திட்டமும் செயற்பாடும் கலைஞர்கள் முதல் கல்விகற்கின்றவர்கள் வரை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. இவ்வாறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் எமது கிராமத்து இளைஞர்களால் மாத்திரமின்றி அனைவரினாலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனையும் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.
குமரகுரு நிலுஜா
இறுதியாண்டு மாணவி
கிழக்குப் பல்கலைக்கழகம்.