தீபாவளி பண்டிகை அன்று அமெரிக்காவில் பொதுவிடுமுறை அளிப்பது குறித்த மசோதா அந்நாட்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் எதிர்ப்பின்றி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அமெரிக்காவிலும் இனி தீபாவளி அன்று பொது விடுமுறை அமலுக்கு வரும்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ராஜா கிருஷ்ணமூர்த்தி இந்த மசோதாவை முன் மொழிந்துள்ளார். தீபாவளி பண்டிகையின் வரலாறு, முக்கியத்துவம், சமயக் கலாச்சாரம் உள்ளிட்டவைகள் குறித்தெல்லாம் அந்த மசோதாவில் விரிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீபாவளியின் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் அங்கீகரிப்பதற்கான இந்த மசோதாவை முன்மொழிவதிலும், அறிமுகப்படுத்துவதிலும் தாம் மகிழ்ச்சி கொள்வதாக ராஜா கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாவை அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர், கரோலின் மலோனி அமெரிக்க மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறார். அமெரிக்காவில் வாழும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் நலனையும், மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு இந்த மசோதாவை தாக்கல் செய்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.