இலங்கை பிரதான செய்திகள்

“தமிழ் பேசும் கட்சிகளின் உரையாடலில், தமிழரசுக் கட்சியும் கலந்து கொள்ளத்தான் வேண்டும்.”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆகியோர் இடையே நேரடி கலந்துரையாடல், சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடந்தது.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக ஹக்கீமும், மனோவும், கூட்டமைப்பு தலைவருக்கு எடுத்து கூறினர். இதில் வடக்கு கிழக்கின் முன்னணி கட்சியான தமிழரசுக் கட்சியும், சிரேஷ்ட தலைவராக சம்பந்தனும் கலந்துகொள்வதை தாம் விரும்புவதாக மனோ, ஹக்கீம் இருவரும் வலியுறுத்தி கூறினர்.

சிநேகபூர்வமாக நடைபெற்ற இந்த உரையாடலில், தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மத்தியில் பொதுவான ஒரு தளம் ஏற்படுவதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட சம்பந்தன் மேலும் கூறியதாவது,

“ஜேஆர்-தமிழ் கட்சிகளின் பெங்களூர் பேச்சுகள், திம்புப் பேச்சுகள், இந்திரா காந்தியுடன் தமிழ்க் கட்சிகளின் பேச்சு, ராஜீவ் காந்தியுடன் பேச்சு, இவற்றின் பின்தான் 13ஆம் திருத்தம் இலங்கை அரசியலமைப்பில் நுழைந்தது.

இடையில் ஒருமுறை மஹிந்த ஆட்சி, 13ஆம் திருத்தம் உள்ளிட்ட மாகாண சபைகளையே அரசியலமைப்பிலிருந்து தன்னிச்சையாக அகற்ற முயன்றது. அதன்போது நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியப் பிரதமரிடம் முறையிட்டேன். உடனடியாக சில மணித்தியாலங்களில் இந்திய பிரதமரின் விசேட தூதர் விசேட விமானத்தில் கொழும்பு வந்து, அந்த முயற்சியை, பாரிய எதிர்விளைவுகள் ஏற்படும் என கூறி தடுத்து நிறுத்தினார். அதுவே இந்தியாவின் பாத்திரம்.

13ஆம் திருத்தம்தான் இந்நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்ற ஒரே அதிகார பரவலாக்கல் சட்டம். ஆனால், 13ஆம் திருத்தம் முடிவல்ல, ஆரம்பம். அது தீர்வல்ல. அது ஒரு அஸ்திவாரம். அதிலிருந்து கட்டடம் கட்டப்பட வேண்டும்.

ஈழத்தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தமிழர் ஆகிய எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து தாம் இலங்கையர் என உணரும் அடிப்படையில், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் முறையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.

தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமை முயற்சியை அகில இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது. நாங்களும் கலந்து பேசத்தான் வேண்டும். கலந்து பங்களித்து ஒற்றுமையை மேலும் பலப்படுத்தத்தான் வேண்டும்.

தமிழ்க் கட்சிகளின் பேச்சுவார்த்தை தளத்தில் நாம் எப்படி இணைந்து கொள்வது என்பது தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றம் கூடும்போது, நமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி உங்களுக்கு அறிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • கடந்த 12 வருடங்களாக தமிழ் கட்சிகள் பிளவுபட்டு பொது விடயங்களைக் பற்றி, கூடிப் பேச முடியாத அளவிற்கு மூன்று குழுக்களாக உருவெடுத்துள்ளது. இதை மாற்றி அமைக்க இப்பொழுது எடுக்கப்படுகின்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. இது தமிழ் கட்சிகளை நிரந்தரமாக ஒன்றுபட வைப்பதாக இருக்க வேண்டும்.