பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவை (Sheikh Hasina) அதிபர் மக்ரோன் இன்று எலிஸே மாளிகையில் வரவேற்றார் .லண்டனில் இருந்து பாரிஸ் வந்தடைந்த அவருக்கு முன்னராகப் பாரிஸ் விமான நிலையத்தில் வைத்து குடியரசுக்காவல் படையினர் மரியாதைஅளித்தனர்.
இந்தோ-பசுபிக் பாதுகாப்பு நிலைவரம்குறித்து இரு தலைவர்களும் தமது சந்திப்பின்போது கலந்துரையாடினர் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.சுதந்திரம்,அமைதி, வெளிப்படை, பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கிய இந்தோ-பசுபிக் பிராந்தியம் குறித்த தங்கள் இரு நாடுகளினதும் ஒரே பார்வையைஇரு தலைவர்களும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் – என்று மக்ரோனின் அலுவலக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
அவுஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கி ஒப்பந்தம் இழக்கப்பட்டதால் இந்தோ-பசுபிக்கில் தனது செல்வாக்கில் ஏற்பட்ட இழப்பினை இட்டு நிரப்பும் முயற்சிகளில் பிரான்ஸ் இறங்கியுள்ளதை பங்களாதேஷ் பிரதமருடனான சந்திப்புக் காட்டுவதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
“கோப் – 26” பருவநிலை உச்சி மாநாட்டில்கலந்து கொண்ட பின்னர் பிரதமர் ஹசீனா லண்டனில் இருந்து இங்கு வருகை தந்துள்ளார். அவர் பாரிஸ் சமாதான மன்றத்தின் மாநாட்டிலும் (Paris Peace Forum) பங்கேற்கவுள்ளார். பிரான்ஸின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடனும் அவர் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார். செனற் சபை உறுப்பினர்களையும் சந்திக்கவுள்ளார்.
பாரிஸ் சமாதான மன்றத்தின் மாநாட்டில்கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின்துணை அதிபர் கமலா ஹரிஸும் பாரிஸ்வருகை தந்துள்ளார்.அவுஸ்திரேலியாவின்அணு நீர்மூழ்கி விவகாரத்தால் பிரான்ஸுடன் ஏற்பட்ட ராஜீக நெருக்கடிக்குப் பிறகுபாரிஸ் வருகை தருகின்ற கமலா ஹரிஸ்இரு தரப்பு உறவுகளை மீண்டும் ஸ்திரப்படுத்தும் விதமான பேச்சுக்களில் ஈடுபடவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
———————————————————————-
குமாரதாஸன். பாரிஸ்.10-11-2021