அரச புலனாய்வுப் பிரிவினருக்கும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சந்தேக நபரான சஹ்ரான் ஹாசிமுக்கும் இடையில் உள்ளதாகக் கூறப்படும் தொடர்பு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டை அமைச்சர் சரத் வீரசேகர இன்று (11.11.21) நாடாளுமன்றத்தில் நிராகரித்தார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட அவர், சஹ்ரானின் வீட்டுக்கு அரச புலனாய்வுப் பிரிவினர் செல்வில்லை என்பதுடன் அவ்வாறான குற்றச்சாட்டுகளையும் முழுமையாக மறுத்தார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களின் வீட்டிற்கு அரச புலனாய்வுப் பிரிவினர் சென்றதாக ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபரின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹதியா குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களான நாணயக்கார மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அம்பாறை காவற்துறை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஹாதியா வழங்கிய வாக்குமூலங்களை மேற்கோள்காட்டி, இது தொடர்பான ஆதாரங்களை காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.