இந்கிலாந்தின் லிவர்பூல் மருத்துவமனைக்கு அருகிலான குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தலின் அளவு கடுமையான என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல்களுக்கு இப்போது அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை உள்துறை செயலாளர் பிரிதி படேல் உறுதிப்படுத்தியுள்ளார். லிவர்பூலில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நடந்த வெடிப்பு சம்பவத்தை காவல்துறை பயங்கரவாத சம்பவமாக அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த பெப்ரவரி 2021 முதல், கணிசமானதாக இருந்த இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை கணிசமான என்பதிலிருந்து கடுமையான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக இப்போது தாக்குதல்களுக்கு அதிக சாத்தியம் என்று தீர்மானிக்கப்படுகிறது.
குண்டுவெடிப்பு தொடர்பாக நான்கு பேரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர், இதில் டக்ஸிக்குள் பயணி ஒருவர் உயிரிழந்தார்.
லிவர்பூல் மகளிர் மருத்துவமனையின் வரவேற்பறைக்கு வெளியே டக்சி வந்தபோது வெடித்துச் சிதறிய வெடிகுண்டு சாதனத்தை அந்த பயணி வாகனத்திற்குள் எடுத்துச் சென்றதாக காவற்துறையினர் நம்புகின்றனர்.
இவ்வாறான சூழலில், பிரித்தானியாவின் ஜேடிஏசி என்ற கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், அச்சுறுத்தல் அளவை உயர்த்துவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும், கடந்த மாதத்தில் நடந்த இரண்டு சம்பவங்களும் இதற்கு காரணமாக இருந்ததாககவும் பிரிதி படேல் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமெஸ் எசெக்ஸில் தனது தொகுதியில் மக்களை சந்தித்த போது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட தாக்குதலும் பயங்கரவாதச் சம்பவமாக அறிவிக்கப்பட்டது. இந்த கொலை நடந்து ஒரு மாதத்தில் லிவபூல் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.