தொற்று நோய் காரணமாக மட்டும் தான் பொது முடக்கம் வரும் என்று இல்லை. சுத்தமான காற்று இல்லாமலும் இனிமனிதர்கள் வீடுகளுக்குள் முடங்க நேரிடும்.சுற்றுச் சூழல் பாதிப்புகள் வீட்டு வாசல்களுக்கு வந்து கதவைத் தட்டும்நிலைமை தோன்றிவிட்டது.
கிளாஸ்கோ மாநாட்டில் நிலக்கரியைக் கைவிடமாட்டோம் என்று பிரதமர் மோடி பிடிவாதமாய் நின்ற சமயத்தில் தலைநகர் டில்லியை நச்சுப் புகை மூட்டம் மூடிப் போர்க்கத் தொடங்கியது. இப்போது நகரை முடக்கும் அளவுக்கு நிலைமை ஆபத்தாக மாறியுள்ளது.
புதிது புதிதாகக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளன .மாசை ஏற்படுத்துகின்ற கட்டடத் தொழில்களும் வாகனப்போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பணியாளர்கள் வீடுகளில் இருந்துகடமை புரிய அனுமதிக்கப்பட வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதனால் அரசுப் பணியாளர்கள்நூறு வீதமானோர் வீடுகளில் இருந்து பணியைத் தொடர்கின்றனர். அத்தியாவசியமற்ற பொருள்களை ஏற்றிவரும் கனரக வாகனங்கள் தலைநகருக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்குமாறும் N95 வகை மாஸ்க்குகளைஅணிந்து வெளியே செல்லுமாறும் நகர மக்களுக்கு மாநில அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். உலகில் மிகவும் மாசு கூடிய நகரங்களின்பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்ற புதுடில்லி, இம்முறை மிக மோசமானபாதிப்புகளைச் சந்திக்கிறது.
கொரோனாவைரஸ் போன்று வளி மாசும் நகர வாழ்க்கையை முடக்கியுள்ளது. காற்றில் PM2.5 எனப்படும் மாசுத்துகள்கள், நுரையீரலை அடைக்கக் கூடியது என்று உலக சுகாதார அமைப்பினால் வரையறுக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதுடில்லியின் சில பகுதிகளில் மாசுக் குறியீடு மிக மோசமானது என்று (Severe) வகைப்படுத்தக் கூடிய அளவில் – 400 என்ற அளவைத் தாண்டி உள்ளது.வளியின் தரக் குறியீடு(air quality index or AQI) 0-50 வரை இருப்பின் அது மிக நன்று.51-100 இருந்தால் திருப்திகரமானது. ஆனால் டில்லியில் அது 400 ஐஎட்டியுள்ளது.இது சுவாசம் மற்றும் இதயசெயலிழப்பை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான அளவு ஆகும்.
வாகனங்களது புகை, தொழிற்சாலைகளது உமிழ்வுகள், அயல் மாநிலங்களில்விவசாயிகள் தங்கள் வயல்களை எரியூட்டுவது போன்ற பல காரணங்களால்புது டில்லியின் காற்று மண்டலம் ஆண்டுதோறும் இதே காலப்பகுதிகளில் பெரும் மாசடைகிறது.
தீபாவளிப் பட்டாசுகளும்த ம்பங்குக்கு காற்றில் நஞ்சைக் கலக்கின்றன. கண் எரிவு, இருமல், முட்டு, ஆஸ்மா மற்றும் சுவாசச் சிரமங்கள் போன்ற பாதிப்புகளுடன் மருத்துவமனை வருவோரது எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
——————————————————————- –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 17-11-2021