கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியா விட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் பயணம் மேற்கொண்ட அவர், இன்று(4) தனியார் விடுதியில் இடம்பெற்ற 43 படையணியின் புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
புலம்பெயர்ந்தவர்கள் எம்முடன் மீண்டும் இணைந்து கைகோர்க்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்த இரத்தம் சிந்திய விடயங்களை மறக்க முடியா விட்டாலும் மறந்து அதற்கு மன்னிப்புக் கொடுத்து தற்போது உள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.
சிங்கள மக்கள் பெருவாரியான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதிக்கு வழங்கியிருந்தார்கள். ஆனாலும் தற்போது அதே சிங்கள மக்கள் அவரை வெறுக்கின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலில் 2023 ஆம் ஆண்டு இடம் பெறும். அந்த நேரத்தில் நேர்மையான துஷ்பிரயோகத்திற்கு எதிரான செயற்படுகின்ற ஒருவர் களமிறக்கப்படுவார்.
எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சொல்வதை தான் செய்வோம் செய்வதைச் சொல்வோம் எங்களுடன் நீங்களும் கைகோர்க்க வேண்டும்.
43 படையணியை நீங்கள் படையணியாக கருதக்கூடாது எதிர்காலத்தில் அரசியலில் வியூகங்களை வகுக்க உருவாக்கப்பட்ட அமைப்பே இதுவாகும்.1943 நமக்கு கிடைத்த இலவசக் கல்வி அடிப்படையாக கொண்டு 43 படையணி இயக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல எம்முடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றார்.