ஜக்குலின் பெர்னான்டஸ் – சுரேஸ்சந்திரசேகர்.
200 கோடி இந்திய ரூபாய் மோசடி வழக்கு தொடர்பாக, இலங்கையை சேர்ந்த பொலிவுட் நடிகை ஜக்குலின் பெர்னான்டஸ் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரோடு தொடர்புடையதாக, ஏற்கெனவே ஜக்குலின் பெர்னான்டஸுக்கு லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மஸ்கட் செல்வதற்காக மும்பை விமான நிலையத்திற்கு ஜக்குலின் பெர்னான்டஸ் சென்றிருந்தார். அங்கு அவரை அமலாக்கத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்று அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டுள்ளது. அதில், சுகேஷ் தனது காதலி ஜக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளில் 52 லட்சம் ருபாய் மதிப்புள்ள குதிரையும் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது