மனித உரிமைகளின் வரலாறு
மனித உரிமைகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது எனலாம். மனித உரிமை பற்றிய கருத்துக்கள் 1789ல் ஏற்பட்ட பிரான்சிய புரட்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பிரான்சிய அரசியலமைப்புக்குள்ளும். அமெரிக்க புரட்சியுடன் முன்வந்த தோமஸ் ஜெபர்சனினால் வரையப்பட்ட 1776-7ல் அங்கீகரிக்கப்;பட்ட அமெரிக்க சுதந்திர சாசனத்தினுள்ளும், மனித உரிமைகள் உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போல், பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மக்னாகாட்டா’ ஒப்பந்ததும், சிரேஸ்ட சுதந்திர கருத்தியல்வாதியான ஆப்ரஹாம் லிங்கனினால் முன்வைக்கப்பட்ட சமத்துவம் தொடர்பான கருத்தியலும் மனித உரிமைகள் தொடர்பான முக்கிய கடமையாற்றியுள்ளது.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945ல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்தின் இடத்தில் வேறொரு புதிய அமைப்பொன்றை அமைக்க முன்வந்தன. இந்த அமைப்புத்தான் ஐக்கிய நாடுகள் சபையாகும். இது தோன்றியதிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் முக்கியமான பங்கை வகித்து வருகின்றது. மூன்றாம் உலக மகா யத்தம் ஒன்றினைத் தடுக்கும் நோக்கில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் முக்கிய இலக்காக மனித உரிமைகளுக்கு கௌரவம் என்பதாகும்.
மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்கு அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது.
அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்
மானிடக் குடும்பத்தினர் உள்ளார்ந்த கௌரவத்தையும், அவர்களின் சமமான, பிரிக்க முடியாத உரிமைகளையும் அறிந்து ஏற்பதே உலகில் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானத்தின் அடித்தளம் ஆகும்’ என சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் முன்னுரை எடுத்துக் கூறுகிறது.
இதனடிப்படையில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 1948 டிசம்பர் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் கொண்டு வரப்பட்டது. மனித உரிமைகள் உலகளாவியவை. அதாவது யாவருக்கும் கிடைப்பவை. இந்தக் கொள்கைதான் முதன் முதலில் வலியுறுத்தப்பட்டது. மனித உரிமைகள் என்ற கருத்தாக்கம் சட்டபூர்வமாக்குமாறு உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கவேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் வரலாற்றில் முதன் முறையாக 30 உறுப்புரைகளைக் கொண்ட இந்த ஆவணம் எழுத்து வடிவில் பதிவு செய்தது. மனித உரிமைகள் எல்லா மனிதர்களுக்கும் உரியவை என்ற சிந்தனை நாடுகள் அல்லது பிரதேசங்களின் அரசியல் அந்தஸ்து வேறுபாடின்றி இதனைச் பரவச் செய்ய வேண்டும் என கையெழுத்திட்ட உறுப்பு நாடுகளுக்கு பொதுச் சபையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
‘உலகில் நிலவும் சுதந்திரம், நீதி மற்றும் சமாதானம் என்பவை குறித்த அடிப்படை மனித குலத்தைச் சேர்ந்த சகலரினதும் கௌரவம் மற்றும் பராதீனப்படுத்த முடியாத உரிமைகளின் அங்கீகாரமாகவிருப்பதால் என்று ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் உள்ளடக்கமும், நோக்கமும், மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலட்சியமும் புலனாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள் என்பதாகும்.
மானிடக் குடும்பத்தின் உறுப்பினர்களின் உள்ளார்ந்த கௌரவத்தினையும் அவர்களின் சமமான பிரிக்க முடியாத உரிமைகளையும் சுதந்திரம், நீதி, சமாதானம், இவற்றின் அடித்தளமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை இந்தப் பிரகடனத்தை ஏற்ற போது 48 நாடுகள் உடன்பாடாக வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை. மனித உரிமைகளில் நல்வாழ்க்கைக்கும், விடுதலைக்குமான உரிமை, பேச்சுத் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் சட்டத்தின் முன் சமத்துவம் போன்ற குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அத்துடன் கலாச்சார செயற்பாடுகளில் பங்கெடுத்தல். வேலைக்கான உரிமை, கல்விக்கான உரிமை உட்பட சமூக பொருளாதார கலாச்சார உரிமைகளும் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பொதுவான மனித உரிமைகள் பல சமயங்களில் உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், சர்வதேச சட்டங்கள். அல்லது பிற மூலங்கள் என எழுதப்பட்ட சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. தனிமனித அல்லது குழு உரிமைகளை மேம்படுத்தவும் அல்லது பாதுகாக்கவும் சட்டபூர்வமான வழிகளில் செயல்பட சர்வதேச மனித உரிமைகள் சட்டம் அரசாங்;கங்களுக்கு பொறுப்புக்களை அளிக்கிறது.
மனித உரிமைகள் யாவருக்கும் உரியது. பல்வேறு நாடுகளில் மனிதர்கள் நடத்தப்படும் முறை பல்வேறு இருந்தாலும் அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் இன்று உலகிலிருக்கும் எல்லா மக்களுக்கும் இது பொருந்தும். சில நாடுகள் மனித உரிமைகளை மதிக்கின்றன. இன்னும் சில நாடுகள் இவ்வாறு செய்யாமல் மனித உரிமைகள் மீது வெறுப்பும் அவற்றை மதிக்காமையும,காட்டுமிராண்டித்தனமான செயல்களை உருவாக்கி மானிட இனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி பொதுமக்களின் மிக உயர்ந்த விருப்பமான பேச்சு மற்றும் நம்பிக்கைச் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
மனித உரிமைகள் யாவருக்கும் கிடைப்பவை
இனஞ்சார், மதஞ்சார் மற்றும் மொழிசார் சிறுபான்மையினரைச் சேர்ந்த ஆட்களின் உரிமைகள் சம்பந்தமாக குடியியல், மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச சமவாயத்தில் 27ம் உறுப்புரையின் ஏற்பாடுகள் கூறுகிறது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தில் இன ரீதியான வேறுபாடுகள் காட்டப்படக்கூடாது என கூறுகிறது. இனம், பால், நிறம், போன்ற பலவற்றின் அடிப்படையி;ல் வேறுபடுத்தி நோக்குதலை இது தடைசெய்கிறது. அதாவது வேறுபடுத்தி நோக்காத கோட்பாட்டின் அடிப்படை சமத்துவக் கோட்பாடாகும். இதனைத்தான் மனித உரிமைகள் பிரகடனத்தில் முதலாவது உறுப்புரை ‘தகுதிகளிலும், உரிமைகளிலும் எல்லா மனிதர்களும் சமமாகவும், சுதந்திரமாகவுமே பிறக்கிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் யாவும் ஒன்றி;ற்கொன்று நெருக்கமானவை. ஒன்றையொன்று சார்ந்தவை. ஓர் உரிமையை மேம்படுத்துவது பிற உரிமைகளையும் மேம்படச் செய்யும். அதே போல் ஓர் உரிமையை மறுப்பது பிற உரிமைகளையும் எதிர்மறையாக பாதி;க்கிறது.
மனித உரிமை மீறல்கள்
அனைத்துலக மனித உரிமைக் பிரகடனங்களி;ல் உள்ள விடயங்களை அல்லது சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களையோ எந்த அரசோ அல்லது தனி மனிதரோ, குழுவோ அவமதி;த்து மீறும் போது மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறான மனித உரிமைகள் மீறப்படும் போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு அல்லது அவர்களால் நியமி;க்கப்பட்ட சபைக்கு மட்டுமே எந்த உரிமை மீறப்பட்டுள்ளன என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் தார்மீகப் பொறுப்பு உள்ளது. இந்த வகையில் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகள் குழுக்கள், தேசிய நிறுவனங்கள், அரசாங்கங்கள், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சித்திரவதைக்கு எதிரான உலக நிறுவனம் கருத்துப் பரிமாற்றத்திற்கான சர்வதேச அவை போன்ற பிரபல்யமானவர்கள் கண்காணிக்கின்றனர் மட்டுமன்றி அவற்றினை ஆவணப்படுத்துகின்றனர். அதன்பின் மனித உரிமைச் சட்டங்களை மதிக்குமாறும், அமுல்படுத்துமாறு அந்தந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.
ஆக்கிரமிப்பு போர்கள், போர் குற்றங்கள், இனப்படுகொலை உள்ளிட்ட மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவை சர்வதேச மனிதாபிமானச் சட்டத்திற்கு எதிரானவை. இவைகள்தான் மனித உரிமைகள் மீறல்களில் மிகக் கடுமையானதாகும் என்பதால் பொறுப்புடன் கையாள வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கிறது.
அரசுகளின் கடற்பாடுகள்:
எல்லா அரசுகளும் மனித உரிமைகளை அளிப்பது போலவே பொறுப்புக்களையும் கொண்டுள்ளது. அரசுகள் இந்தப் பொறுப்புக்களையும, கடமைகளையும் மதிக்க, பாதுகாக்க, நிறைவேற்ற வேண்டியது சர்வதேச பிரகடனங்களின் பணியாகும் என கருதப்படுகிறது. மனித உரிமை மீறல்களிலிருந்து தனிமனிதனையும், குழுக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுகளிடம்தான் இருக்கிறது. மனித உரிமைகளை எவரும் பறிக்கக்கூடாது. ஒருவன் நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் மாத்திரமே அவனது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம்.
உலகின் எல்லா மூலைகளிலும் மனிதர்கள் யாவருக்குமான உரிமைகளை மேம்படுத்தவும், மதிக்கவுமான சக்திகள் பல இருக்கின்றன. எண்ணற்ற மனித உரிமைப் பிரச்சினைகளையும் நிகழ்வுகளையும் திறம்படக் கையாள போதுமானதாக அவைகள் இல்லை என்பதுதான் பெரும் குறையாகவுள்ளது. இந்த பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இசைந்து ஏற்றுள்ள நிலை நமது அன்றாட வாழ்க்கையில் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை வலிமையாக்கவும், வலியுறுத்தவும் செய்கிறது.
அப்துல் அஸீஸ், பிராந்திய இணைப்பாளர். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கல்முனை.