Home இலங்கை தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண்பூசாரி தொடர்பில் விசாரணை

தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பெண்பூசாரி தொடர்பில் விசாரணை

by admin

தாலிக்கொடி ,தங்கசங்கிலி உட்பட  சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கால் பவுண் தங்க நகைகளை கொள்ளை தொடர்பில் கைதாகிய பெண்பூசாரி தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி காவல்துறைப்பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை(7)  பலவருடமாக குழந்தை இல்லாத தம்பதியினர்   பரிகார பூஜை ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது  பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர்   பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த   தாலிக்கொடி தங்கசங்கிலி உட்பட  சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 7 கால் பவுண் தங்க நகைகளை களவாடி சென்றிருந்தார் என காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய குறித்த தங்கநகைகளை கொள்ளையிட்டு சென்றதாக சந்தேகிக்கப்பட்ட  பெண் சந்தேக நபரையும் அவரது 20 வயது மதிக்கத்தக்க ஆண் நண்பரையும் காத்தான்குடி காவல் லைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் துமிந்த நயனசிறியின் வழிகாட்டலுக்கமைய     குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி    உப காவல்துறை பரிசோதகர்  வை. விஜயராஜா தலைமையிலானோா்   கடந்த  வெள்ளிக்கிழமை (10) இரகசிய தகவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு கைது செய்திருந்தனர்.

குறித்த களவாடப்பட்ட வீட்டு  உரிமையாளர் தமது வீட்டை காவல் செய்வதற்கான சடங்கு(பரிகார)  பூஜை ஒன்றை செய்வதற்காக சம்பவ தினமான  கடந்த 7 ம் திகதி புதன்கிழமை  கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பூசாரியான சந்தேக நபரை வரவழைத்துள்ளார்.

அவ்வாறு வரவழைக்கப்பட்ட அந்த பெண் பூசாரி குறித்த களவாடப்பட்ட வீட்டில் அன்று  இரவு தங்கவைக்கப்பட்டு  பூஜை  நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் மறுநாள் அதி காலை   அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் பூஜை நிறைவடைந்த பின்னர் வீட்டின் அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த   6 பவுண் நிறை கொண்ட தாலிக்கொடி ஒரு பவுண் நிறை கொண்ட தங்க சங்கிலி கால் நிறை பவுண் கொண்ட மோதிரம் காணாமல் சென்றிருந்ததை அறிந்த  வீட்டு உரிமையாளர்   காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.இம்முறைப்பாட்டிற்கமைய   காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்ட நிலையில் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 31 வயதுடைய பெண்பூசாரியை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது  களவாடப்பட்ட  தங்க ஆபரணங்கள் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் ஈடு செய்யப்பட்டிருந்ததுடன்  ஏனைய  நகைகள்  தங்க நகைகடைகளில் விற்கப்பட்ட நிலையில் மீட்கபப்டது.

இதேவேளை கொள்ளைச்சம்பவத்தில் கைதாகிய பெண் பூசாரி சந்தேக நபர் கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி ,  அக்கரைப்பற்று காவல் நிலையங்களில் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் வழக்கு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் கைதான பெண் சந்தேக நபரும் அவரது ஆண் நண்பரையும் மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டு தற்போது 14 நாட்கள்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த பெண்  தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருப்பின்  காவல் நிலையத்தினை தொடர்பு கொள்ளுமாறு  காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More