சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய தினம் வியாழக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நல்லுறவு நிலவிவருகின்றது.அதன் ஒரு அங்கமாகவே சீன தூதரகமானது யாழ்ப்பாண மக்களுக்கு மீன்பிடி வலை மற்றும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைக்கிறது. இந்த உதவி வழங்கும் நிகழ்வை ஒரு ஆரம்ப நிகழ்வாகவே நாங்கள் கருதுகின்றோம். இன்று ஆரம்பமான இந்நிகழ்வானது சீனா மற்றும் வடக்கு மக்களிடையே நல்லுறவை மேம்படுத்தும் என நாங்கள் கருதுகின்றோம்.
குறிப்பாக சீன தூதரகமானது இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது சீனா ,இலங்கைக்கு பெருமளவில் உதவிகளை வழங்கியுள்ளது அதேபோல வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கான தடுப்பூசியிணை பெற்றுக்கொடுப்பதில் சீனா பெரும்பங்காற்றியுள்ளது
அதேபோல் நேற்று வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்குமென ஐந்து நீர் சுத்திகரிக்கும் இயந்திரப் பொறிமுறையினையும் வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளித்துள்ளோம்.அதேபோல் 5 மடிக்கணணிகள் மற்றும் ஒரு தொகுதி புத்தகத்தையும் பொது நூலகத்திற்கு வழங்கியுள்ளோம்.
எனவே இவை அனைத்தும் ஒரு ஆரம்பமாகவே நாங்கள் கருதுகின்றோம். எதிர்காலத்தில் சீன தூதரகம் யாழ்ப்பாண மக்களுக்கு தொடர்ச்சியான உதவிகளை வழங்கும். உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாக் காலத்தில் இந்த சிறிய உதவி வழங்கப் படுவதை ஒரு ஆரம்பப் புள்ளியாகவே நாங்கள் பார்க்கின்றோம். எதிர்காலத்தில் உதவித்திட்டங்கள் வழங்க முடியும் என்றார்