அடுத்த மாதம் முதல் சிலோன் தேயிலையை தெஹ்ரானுக்கு அனுப்புவதற்கு இலக்கு வைத்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
‘கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எண்ணெய் கொள்முதலுக்காக ஈரானுக்குத் திருப்பிச் செலுத்த ஒவ்வொரு மாதமும் 3.8 மில்லியன் மதிப்புள்ள தேயிலையை அனுப்புவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த விகிதத்தில், கடனை திருப்பிச் செலுத்த நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அடுத்த நான்கு வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தெஹ்ரானுக்கு தேயிலையை அனுப்புவதன் மூலம் ஈரானுடனான £190 மில்லியன் எண்ணெய் கடனை தீர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இலங்கைக்கு மிகவும் அவசியமான வெளிநாட்டு நாணயத்தை சேமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த ஒப்பந்தம் ஏற்கத்தக்கதா என்பது குறித்து தெஹ்ரானில் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என இலங்கைத் தரப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் இலங்கையின் பணவீக்கம் 11.1 சதவீதத்தை எட்டியதை அடுத்து, மோசமான பொருளாதார நெருக்கடி உணவுப் பற்றாக்குறையை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கொரோனா பேரனர்த்தத்தால், இலங்கையின் சுற்றுலாத்துறை சார் வருமானத்தில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி, மற்றும், அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க அரசாங்கம் ஏற்படுத்திய இறக்குமதி தடை, காரணமாக, அத்தியாவசிய பொருட்களுக்கான பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.