யாழில் உள்ள தனியார் வைத்திய சாலை ஒன்று பொறுப்பற்ற வகையில் தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழித்துள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பரமேஸ்வர சந்திக்கு அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தமக்கு சொந்தமான காணியில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீயிட்டு அழிக்க முற்பட்டுள்ளனர்.
குறித்த காணியை சுற்றி நெருக்கமான குடியிருப்புக்கள் காணப்படுவதுடன் , அப்பகுதி மிகுந்த சன நெரிசல்மிக்க பகுதியாகும். அங்கு எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்றி சாதாரண கழிவுகளை எரியூட்டுவதனை போன்று எரியூட்டியுள்ளனர். மருத்துவ கழிவுகளுக்குள் ஊசி மருந்து போத்தல்கள் , பொலீத்தின்களோடு காணப்பட்ட மருந்துக்கள் என அனைத்தையும் எரியூட்டியுள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அங்கு விரைந்தவர்கள் , நிலைமையை பார்வையிட்டு சுகாதார துறையினருக்கு அறிவித்தனர்.
சுகாதார துறையினர் அவ்விடத்திற்கு வந்து ஆதாரங்களை திரட்டியதுடன் , வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த தனியார் மருத்துவ மனை இதற்கு முதலும் பல தடவைகள் குறித்த காணியில் இவ்வாறாக மருத்துவ கழிவுகளை தீ மூட்டி அழித்து வந்த போதும் , அது தொடர்பில் அயலவர்கள் உள்ளிட்ட பலர் மருத்துவ மனைக்கு முறையிட்ட போதிலும் , மருத்துவமனை நிர்வாகி அது தொடர்பில் எவ்வித கரிசனையும் இல்லாதது தொடர்ந்து அந்த காணியில் மருத்துவ கழிவுகளை தீயிட்டு அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது