சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆம் ஆண்டுகள் பூா்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது
அத்துடன் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியிலும் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்று காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர்.
சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர்.
மேலும் மன்னார் பேசாலை வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் மன்னார் மாவட்ட கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குனரும், மன்னார் பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ரி.லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் நினைவேந்தல் இடம் பெற்றது.
உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. தேசிய கலைஞர் எஸ்.ஏ.உதயன் சுடர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.