பலாலி சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் சென்ற அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக பலாலி சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.
குறிப்பாக வட பகுதியில் உள்ள மக்கள் குறைந்த நேரத்தில் குறைந்த செலவுடன் தென்பகுதிக்கு வந்து செல்வதற்கும் தென்னிந்தியாவிற்கு சென்று வருவதற்குமாக இந்த
விமானநிலையம் திறந்து விடப்பட்டது
அது வடபகுதி மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆனால் இந்த அரசாங்கமானது அவ்வாறான சந்தர்ப்பத்தை வழங்க மறுத்து தற்போது விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது.
எனினும் பொறுத்திருந்து பார்ப்போம் நான் தற்போது அரசியலில் இல்லை. அத்தோடு நான் அங்கம் வகித்த கட்சியிலிருந்து விலகி இருக்கின்றேன். எனினும் நான் நினைக்கின்றேன் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பு கொண்டுள்ளார்கள் இந்த அரசாங்கம் விரைவில் வீடு செல்ல வேண்டி வரும். எனினும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதற்காக ஒன்றிணைந்து ஒரு கூட்டணியாக செயற்படும் காலம் விரைவில் கைகூடும் அது விரைவில் இடம்பெறும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.