பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை சீனாவின் உளவு அமைப்புக்கு விற்றதாக குற்றம்சட்டப்பட்டுள்ள வழக்கில், ஊடகவியலாளர் ராஜீவ் சர்மா தொடர்புடைய 48.21 ரூபாய் இலட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமுலாக்கத் துறை முடக்கி உள்ளது.
சீனாவின் உளவு அமைப்புக்கு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை விற்றதாக புதுடெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ராஜீவ் சர்மாவை புதுடெல்லி காவல் துறை கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தது.
அந்த வழக்கில் அவர் பிணையில் வெளியே வந்தார். அதைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமுலாக்கத் துறை அவரை கைது செய்தது. கடந்த வாரம் புதுடெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. இந்நிலையில் புதுடெல்லி பீதம்புராவில் உள்ள அவர் தொடர்புடைய 48.21 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள குடியிருப்பு சொத்துகளை அமுலாக்கத்துறை முடக்கி உள்ளது.
போலி நிறுவனங்கள் மூலம் ‘ராஜீவ் சர்மா சீனாவின் உளவு அமைப்புக்கு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான ஆவணங்களை பணத்துக்காக விற்றுள்ளார். அவரும் அவருடைய நண்பர்களும், சீனா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களில் நடத்தப்பட்ட போலி நிறுவனங்கள் மூலம் பணம் பெற்றுள்ளனர். இத்தகைய போலி நிறுவனங்கள் மூலம் சீன உளவு அமைப்பு ராஜீவ் சர்மா போன்றவர்களுக்கு பணம் கொடுத்து குற்றச் செயல்பாடுகளில் ஈடுபட வைக்கிறது’ என்று அமுலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.
பத்திரிகைத் துறையில் 40 வருடம் அனுபவம் கொண்டுள்ள ராஜீவ் சர்மா, 2010-ம் ஆண்டு முதல் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வந்தார். சீன அரசுக்கு சொந்தமான பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’க்கு தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் சீன உளவு அமைப்புக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டதாகவும், அவர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான தகவலை அவர்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.