யாழில் வருடாந்தம் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது , யாழ்.மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய நிதியில் 20 இலட்ச ரூபாயை ஏற்பாட்டாளர்கள் இதுவரை மாநகர சபைக்கு வழங்கவில்லை என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் மாநகர சபை மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக இறுதியாக நடைபெற்ற குறித்த கண்காட்சிக்காக மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய நிதியான 30 இலட்சம் இதுவரை செலுத்தப்படாதிருந்ததாகவும் அதில் 10 இலட்சம் தற்போது குறித்த தரப்பினரால் செலுத்தப்பட்டுள்ளதாகவும். மிகுதி பணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
அத்தோடு இம்முறை இறுக்கமாக வர்த்தக கண்காட்சியில் காட்சி அறை ஒன்றின் அறவீடு குறைப்பு தொடர்பில் மாநகரசபை இறுக்கமாக இருக்க வேண்டும். அத்துடன் நுழைவுச் சீட்டு உள்ளிட்ட விடயங்களில் மோசடி இடம்பெறாத வகையில் கண்காணிப்பு இறுக்கமாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதுடன் அவ்வாறு மோசடிகள் காணப்பட்டால் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 3 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரின் கடிதம் தொடர்பில் ..
இதேவேளை ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பில் கடிதம் ஒன்று தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அந்த கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் வரையறை செய்துள்ளதுடன் அவ்வாறு ஒழுக்கம் மற்றும் சட்டவரையறையை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவரை நீக்கவோ அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக முதல்வரால் சபையில் தெரிவிக்கப்பட்டது.
மொழிப்பிரச்சனை காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்த கோரிக்கை விடுத்தல்.
தொடர்ந்து வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களின் உச்சநீதிமன்ற வழக்கு ஆவணங்கள் நீண்டகாலமாக மொழிப் பிரச்சினை காரணமாக நிலுவையிலுள்ளமையால் அவற்றை கால தாமதமின்றி விரைவு படுத்தி தீர்ப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கையின் பிரதம நீதியரசரிடம் வலியுறுத்துவதற்கு மகஜர் சமர்பிக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான முடியப்பு றெமீடியஸ் முன்வைத்த யோசனைக்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆரிய குள பாதுகாப்பை உறுதிப்படுத்துக.
அத்தோடு ஆரியகுளம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அப்பகுதியை புனரமைக்கும் போது இருந்துவந்த நிலை தற்போது மாறி பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்தேறி வருவதால் அப்பகுதியில் கண்காணிப்பு கமெரா பொருத்துதல் அவசியம் என்றும் அதன் பாதுகாப்பையும் புனிதத் தன்மையையும் உறுதிசெய்ய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகர சபை உறுப்பினர் இரா செல்வவடிவேல் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.