Home உலகம் உய்குர் சமூகம் மீது சீனா புரிவது இனப்படுகொலையே – பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகாரம்

உய்குர் சமூகம் மீது சீனா புரிவது இனப்படுகொலையே – பிரான்ஸ் நாடாளுமன்றம் அங்கீகாரம்

by admin

உய்குர் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது சீனா புரிந்த செயல்களை”மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்”, “இனப்படுகொலை” என்று பிரான்ஸின் நாடாளுமன்றம் அங்கீகரித்திருக்கிறது.

எதிர்க்கட்சிகளில் ஒன்றான சோசலிஸக்கட்சி கொண்டு வந்த தீர்மான வாசகத்தைஆதரித்து 169 உறுப்பினர்கள் வாக்களித்திருக்கின்றனர். எதிராக ஒரேயொரு வாக்கு மட்டுமே செலுத்தப்பட்டிருக்கிறது.

அதிபர் மக்ரோனின் ஆளும் La République en marche (LREM)கட்சி உறுப்பினர்களும் பிரேரணைக்குத் தங்கள் ஆதரவை வழங்கியிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் சோசலிஸக் கட்சிக் குழுவினருக்கு ஒதுக்கப்பட்ட நாளில்-கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்குள் – கட்டுப்பாடற்ற முறையில் பேச எடுக்கப்படக்கூடிய விவகாரமாக – இந்தத் தீர்மானவாசகம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதன்போது பிரான்ஸில் வாழும் உய்குர் அகதிகள் சார்பில் சிலர் பார்வையாளர்களாக நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகிறது. சோசலிஸக் கட்சியின் தலைமைச் செயலாளரும் இடது சாரிகளது நாடாளுமன்றக் குழுவின் தலைவருமாகிய ஒலிவியே ஃபோ (Olivier Faure) முன்மொழிந்த அந்தத் தீர்மான வாசகம், உய்குர் சமூகம் மீது சீன மக்கள் குடியரசு திட்டமிட்ட முறையில் நடத்திய வன்முறைகள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களின் “இனப்படுகொலைத் தன்மையை” (genocidal nature) அங்கீகரிப்பதுடன் அதற்குக் கண்டனம் தெரிவிக்கிறது.

பிரான்ஸின் அரசும் இதேபோன்ற ஒரு பிரேரணையை கொண்டுவந்து சீனாவைக் கண்டிக்கும் தீர்மானத்தைநிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்ற நிலையிலும், சீனாவுடன் புதிய வர்த்தகஒப்பந்தங்களை எதிர்பார்த்துள்ள பின்னணியிலும் நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்ற இத் தீர்மானம் சீனா – பிரான்ஸ் உறவில் தாக்கத்தைச் செலுத்தும் என்று கருதப்படுகிறது.

அதிபர் மக்ரோனும் வெளிவிவகார அதிகாரிகளும் உய்குர் மக்கள் மீதானகொடுமைகளை விமர்சிக்கும் போது “இனப்படுகொலை” என்ற வார்த்தைப் பிரயோகத்தைத் தவிர்த்து வருகின்றனர். உய்குர் இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற இதுபோன்ற தீர்மானம் கடந்தஆண்டு பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டிருந்தது. நெதர்லாந்து கனடா போன்ற நாடுகளும் சீனாவைக் கண்டிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

சீனாவின் மனித உரிமை மீறல்களுக்காக அங்கு நடைபெறுகின்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியைப் பலநாடுகளும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. எனினும் பிரான்ஸின் விளையாட்டு அணியினர் அந்தப் போட்டிகளில் பங்குபற்றுவர் என்ற முடிவை பிரான்ஸ் அரசு இன்னமும் மாற்றிக்கொள்ளவில்லை.

பிரான்ஸின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சீனா கடும் சீற்றத்துடன் கண்டனம் வெளியிட்டுள்ளது.”சீனாவின் உள் விவகாரங்களில் மிகப் பெரியதொரு தலையீடு” அது என்று சீன வெளிவிவகார அமைச்சின்பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.யதார்த்தத்தையும் சட்டத்தையும் புறந்தள்ளி எடுக்கப்பட்ட அறிவிலித்தனமானதீர்மானம் என்றும் அவர் அதனைச் சாடியிருக்கிறார்.

சீனாவின் சிங்ஜியாங் (Xinjiang) மாகாணத்தில் வாழும் துருக்கி மொழி பேசுகின்ற உய்குர்(Uyghurs) சிறுபான்மை முஸ்லீம்களை சீன ஆட்சியாளர்கள் கொடுமைக்குள்ளாக்கி வருவதற்குப்பல சாட்சியங்கள் கிடைத்துள்ளன என்றுமனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

உய்குர் மக்களைப் பெருமெடுப்பில் முகாம்களில் அடைத்துவைத்து அரசியல்மூளைச் சலவை, சித்திரவதைகள், கட்டாய வேலை வாங்கல், கட்டாயக் கருத்தடை போன்ற கொடுமைகள் புரியப்படுவதாக சீனா மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

அவற்றைத் தொடர்ந்து மறுத்துவருகின்ற சீன அரசு, உய்குர் தடுப்பு முகாம்களைத் “தொழிற் பயிற்சி மையங்கள்” என்று கூறிவருகிறது. இளம் உய்குர்சமூகம் இஸ்லாமிய தீவிரவாதத்தின்பிடியில் சிக்குவதைத் தடுப்பதற்கானபயிற்சி நிலையங்களே அவை என்றுஅது கூறுகிறது. ஐ. நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம்அங்கு நேரில் சென்று நிலைமையைப்பார்ப்பதையும் சீன அரசு தடுத்து வருகின்றது.

——————————————————————–

-பாரிஸிலிருந்து குமாரதாஸன். 21-01-2022.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More