மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் இடம் பெறும் சட்ட விரோத கனிய வள மண் அகழ்வு மற்றும் ஆய்வுகளை உடனடியாக நிறுத்தக் கோரி ‘மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பின்’ ஒழுங்கமைப்பில் பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மன்னார் கடற்கரையோரங்களில் காணப்படும் மணல்களில் மிகவும் விலை உயர்ந்த அரிதான ‘தைத்தனியம்’ எனும் கனிமம் அதிக அளவு காணப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த தைத்தனியத்தை அகழ்வு செய்யும் பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதை தடுக்க கோரி குறித்த விழிப்புணர்வு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்று குறித்த தைத்தனியம் அகழ்வுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் முதற் கட்டமாக மன்னாரில் பேசாலை, தலைமன்னார் உள்ளிட்ட பல பகுதிகளில் மணலுக்கு அடியில் பல மீற்றர்கள் குழி தோண்டப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்தக் கோரி மன்னாரின் சுற்றாடலை பாதுகாக்கும் அமைப்பினர் மும் மொழிகள் அடங்கிய குறித்த பதாகைகளை பிரதான பேருந்து நிலையம், வைத்தியசாலை சந்தி, மடு சந்தி உட்பட பல பகுதிகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
மேற்படி காட்சிப்படுத்தப்பட்ட சில பாதைகள் சில இடங்களில் கனிய வள அகழ்வு டன் சம்பந்தப்பட்ட விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது