தமிழ்நாடு, புதுவையை சேர்ந்த 8 பேர் உட்பட 117 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட ஆல்ஃபாபெட் (கூகுள்) சிஇஓ சுந்தர் பிச்சைக்கும், டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுக்கும் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தை ஒட்டி அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் விழாவில் இவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இந்த ஆண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 34 பேர் பெண்கள், 10 பேர் வெளிநாட்டவர். 13 பேருக்கு அவர்களது மரணத்துக்குப் பிறகு இந்த விருது வழங்கப்படுகிறது. இரண்டு விருதுகள் இரட்டையர்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படி இரண்டு பேருக்கு சேர்த்து வழங்கும்போது அது ஒரு விருதாகவே கணக்கிடப்படும்.
எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு…
மறைந்த முப்பைடை தலைமைத் தளபதி பிபின் ராவத், மறைந்த உத்தரப்பிரதேச முதல்வர் கல்யாண் சிங் ஆகியோர் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி ஆகியோர் உட்பட 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன், நடிகை சௌகார் ஜானகி, எஸ்.தாமோதரன், ஆர்.முத்துக்கண்ணம்மாள், ஏ.கே.சி.நடராஜன், டாக்டர் வீராசாமி சேஷய்யா, பல்லேஷ் பஜன்ட்ரி உட்பட 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழில் துறையினருக்கு
சுந்தர் பிச்சை, நடராஜன் சந்திர சேகரன் தவிர, மைக்ரோ சாஃப்ட் செயல் தலைவர் சத்ய நாதெல்ல, கொரோனாவுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி உருவாக்கித் தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ண எல்லா, சுசித்ரா எல்லா (இருவருக்கும் ஒரே விருது), சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை சேர்ந்த சைரஸ் பூனாவாலா ஆகிய தொழில் துறையினருக்கும் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
BBC