மன்னார் கறிற்றாஸ் -வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்தந்தை செ.அன்ரன் அடிகளாரின் வழிகாட்டலின் கீழ் மன்னார் வாழ்வுதய சர்வமத குழுவினர் நேற்றைய தினம் புதன்கிழமை (26) காலை திருகோணமலைக்கான நல்லெண்ண பயணம் ஒன்றை மேற் கொண்டனர்.
குறித்த பயணத்தின் போது திருகோணமலை எகெட் கறிற்றாஸ் நிறுவனத்துடன் இணைந்து திருகோணமலையில் உள்ள சர்வமத தலங்களை பார்வையிட்டதோடு, மத தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
சமய நல்லிணக்கமும்,சமாதானமும் எனும் தொனிப்பொருளில் சர்வ மத தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடல் ஊடாக ஒவ்வொரு சமய விழுமியங்களை கற்றுக் கொள்ளவும்,மதத் தலைவர்கள் மற்றும் சமய பிரதிநிதிகளுடனான உறவை வலுப்படுத்துவதாகவும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது திருகோணமலை சர்வமத செயற்திட்டத்தின் அனுபவப்பகிர்வும் இடம் பெற்ற நிலையில் நேற்று புதன்கிழமை மாலை குறித்த குழுவினர் மீண்டும் மன்னாரை வந்தடைந்தனர்.