Home இலங்கை 13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்!

13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்!

by admin

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை 

தமிழ் சிவில் சமூக அமையம்
Tamil Civil Society Forum

28 சனவரி 2022

13ம் திருத்தத்துக்குள் தமிழ் மக்களின் அரசியற் தீர்வை முடக்கும் சூழ்ச்சியைத் தடுப்போம்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வை சிறிலங்காவின் அரசியல் யாப்பின் 13வது திருத்தத்திற்குள் முடக்கும் முயற்சி அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளது.


தொடர்ந்து வரும் சிங்களப் பேரினவாத அரசுகளால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரம் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பானது பல்வேறு முனைகளிலிருந்தும் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு தொடரும் இனவழிப்பிலிருந்து தம்மைப்பாதுகாத்துக் கொள்வதற்கு உள்ள ஒரே வழி சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றே என தமிழர்கள் ஏழு தசாப்தங்களுக்கு முன்னரே ஏற்றுக்கொண்டுள்ளனர்.


அந்த வகையில் முக்கிய நிகழ்வுகளாக தமிழ் மக்களின் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கக் கோரிய வட்டுக்கோட்டைப் பிரகடனம், அதன் மேலான ஆணையாக அமைந்த 1977ம் ஆண்டின் பொதுத் தேர்தல் முடிவுகள், திம்புப் பிரகடனம், பொங்குதமிழ்ப்; பிரகடனம், 2000 ஆம் ஆண்டின் பின் இலங்கையில் நடந்த சகல தேர்தல்களிலும் தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்த ஒரு தீர்வையும் நிராகரித்தும் இறைமையுள்ள மக்கள் என்ற வகையில் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வைக்கோரியும் மீள மீள வழங்கி வரும் ஆணைகளும், எழுக தமிழ்ப் பேரணி, தமிழ் மக்கள் பேரவை முன் வைத்த தீர்வுத் திட்டம், இறுதியாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியின்; பிரகடனம் வரை தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் தமிழ் மக்களும் அரசியல் வேணவாவாக வெளிப்படுத்தி வருவது சுயநிர்ணய அடிப்படையிலான அரசியல் தீர்வே தேவை என்பதே. மாறாக 13ம் திருத்தமோ அதன்வழியான மாகாண சபை முறைமையோ ஒற்iயாட்சி வரையறைக்குள் அடங்கிய நிர்வாகப் பரவலாக்கம் மட்டுமே என்பதனால் தமிழ் மக்கள் அவற்றை ஏற்றதில்லை.
மாகாண சபைகள் முறைமையானது 1987ன் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. இச்சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட காலந்தொட்டே தமிழ்த் தேசியத்தை தமது உறுதியான கொள்கையாக வரித்துக் கொண்டதனால் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வே தேவை என போராடி வருகின்ற எந்தவொரு கட்சியோ அல்லது இயக்கமோ 13வது திருத்தச் சட்டத்தையும் அதன் வழி வந்த மாகாணசபை முறைமையையும் தீர்வாகவும் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவும் ஏற்றுக் கொண்டதுமில்லை அதை முன்வைத்து வாக்குப் பெற்றதுமில்லை.


இலங்கையை சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து அகற்றி மீள இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் வழியே தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா விரும்புகின்றது. அதற்காக தமிழ் மக்களையும் அவர்களை பிரதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அரசியலமைப்புடன் பிணைக்கும் 13ஆம் திருத்தத்தை உயர்த்திப் பிடிக்கச் சொல்லி இந்தியா அழுத்தம் கொடுக்கிறது. அண்மையில் இந்தியப் பிரதமருக்கு பல தமிழ் கட்சிகள் இணைந்து எழுதிய கடிதத்தின் பின்புலம் இது தான்.


இந்தியா சீனாவுடனான போட்டியில் தமிழர்களை பாவிக்க முனைவது எமக்கு ஓர் வாய்ப்பை வழங்குகின்றது. ஆனால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி நாம் இந்தியாவிடம் நிரந்தர தீர்வை – சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டியை வலியுறுத்த வேண்டுமேயன்றி உப்புச் சப்பில்லாத 13ஆம் திருத்தத்தை அல்ல.


தமிழ் மக்களை 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்துவிடுவதன் மூலம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் தன்னுடைய கடப்பாட்டை நிறைவேற்றியதாகக் கூறி இலங்கையில் தனது செல்வாக்கை ஃ கட்டுப்பாட்டை மீள உறுதிப்படுத்தலாம் என இந்தியா எதிர்பார்க்கின்றது.


அதேவேளை, ஒற்றையாட்சியை வலியுறுத்தும் உறுப்புரையைக் கொண்டுள்ள இரண்டு குடியரசு (1972ன் 2ம், 1978இன் 3ம்) யாப்புகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் அவை தமிழர்களைப் புறந்தள்ளியே உருவாக்கப்பட்டன. யாப்புகளின் உருவாக்கத்தின் போது தமிழ்த் தலைமைகள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாலும், இறுகிப்போன அவற்றின் ஒற்றையாட்சித் தன்மையாலும் தமிழர்கள் அவற்றை ஏற்கவில்லை. தமிழ்த் தலைமைகள் எடுத்த இந்த நிலைப்பாடு, தமிழ் மக்களின் சுயநிர்ணய அடிப்படையிலான உரிமைக் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் ஒன்றாக இன்றும் விளங்கி வருவதை இலங்கை அரசும் அறியும்.


தற்போது 4வது அரசியல் யாப்பை உருவாக்க சிங்கள தேசம் முனைந்து நிற்கின்றது. சிங்கள பௌத்த பேரினவாதமானது அதிகளவு வீரியமான பேரினவாதக் கூறுகளையும் வலுவான ஒற்றையாட்சிப் பண்புகளையும் இதில் உள்ளடக்க எதிர்பார்க்கின்றது.


தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்காத இந்த யாப்பைக் கொண்டு வரும் போது தமிழ்த்தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ளாத நிலை ஏற்படும் என்பதை இலங்கை அரசும் அறியும். அதன் மூலம் தமிழர்கள் தமக்கான ஒரு அரசியல் தீர்வைக் கோருவதற்கான நியாயம் என்றாவது உலகால் அங்கீகரிக்கப்படலாம் என சிங்களப் பேரினவாதம் தெரிந்து வைத்துள்ளது. அதனை இலங்கை விரும்பவில்லை. முன்மொழியப்படும் புதிய 4ம் அரசியல் யாப்பில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க முடியாததும் ஒற்iயாட்சியின் பண்புகளை மீறாததுமான மாகாண சபை முறைமைய தற்போதைய வடிவிலோ அல்லது மேலும் நீர்த்துப்போன வடிவிலோ பேணுவதன் மூலம் புதிய 4ம் அரசியல் யாப்புக்கான வாக்கெடுப்பின்போது தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள வடக்கு – கிழக்கின் தமிழ்த் தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் பெரும்பான்மை ஆதரவை பெற்றுவிடுவதற்கான எதிர்பார்ப்புகளுடன் அரசு தனது வியூகத்தை ஆரம்பித்துள்ளது. அது நடந்துவிட்டால் இறுதியில் தமிழ் மக்களும் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதை உலகுக்கு கூற முடியும்.


புதிய 4ம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பை தமிழ்த் தேசியக்கட்சிகளை ஆதரிக்க வைப்பதன் மூலம் தமிழ் மக்களையும் இலங்கையின் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டோம் அவர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையைக் கைவிட வைத்து மாகாண சபை முறையை ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டோம் என சிறீலங்கா அரசிடம் கூற இந்தியா ஆவலாக உள்ளது.
அதன் மூலம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி இலங்கை தனது ஆள்புலத்தில் இந்திய நலன்களுக்கு விரோதமான சக்திகளை அனுமதிக்கக் கூடாது என கோர முடியுமெனவும் அதற்கு இலங்கை செவிசாய்த்து நடக்கும் எனவும் இந்தியா நம்புகின்றது.


இத்தகைய களப் பின்னணியில் வைத்தே அண்மையில் தமிழ்த் தேசியக்கட்சிகள் பலவும் இணைந்து 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுங்கள் என இந்திய அரசைக் கோரி கடிதம் எழுதியதை நாம் பார்க்க வேண்டும்.


தமிழ்க்கட்சிகள் முன்னெடுத்த இந்த முயற்சி 13ம் திருத்தச் சட்டம் என்ற பயனற்றதும் ஒரு தேசமாக அணிதிரள்வதற்கான எமது அரசியல் அடையாளத்தை அழிக்கும் நிலையை ஏற்படுத்துவதுமான சூழ்ச்சி ஒன்றுக்குள் எம்மை முடக்கும் என்பதை முன்னுணர்ந்ததாலேயே தமிழ் சிவில் சமூக அமையம் (வுஊளுகு) உட்பட 11 தமிழ் சிவில் சமூக அமைப்புகளால் அந்த முயற்சியைக் கைவிடக் கோரி ’13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருதல் எமக்கான அரசியல் தீர்வுமல்ல, வாக்களித்த மக்களின் கோரிக்கையுமல்ல’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனாலும் தமிழ்க் கட்சிகள் சிவில் சமூகத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.


13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுங்கள் என இந்திய மத்திய அரசைக் கோரியுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் இலங்கையின் புதிய 4ம் அரசியல் யாப்பில் 13ம் திருத்தத்தை ஒத்த சரத்துகள் அதாவது மாகாண சபை முறைமை உள்ளடக்கப்படும் போது எவ்வாறு முடிவெடுக்கப்போகின்றன என்ற அச்சம் தமிழ் மக்களிடம் உருவாகத் தொடங்கியுள்ளது.
இன்று 13ம் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குமாறு கோருபவர்களால் ஒற்றையாட்சிப்பண்பைக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் மேலாக நடைபெறும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை சட்ட பூர்வமாக்கி முழுமையடையச் செய்யவுள்ள 4வது அரசியல் யாப்பை எதிர்த்து வாக்களிக்க முடியுமா என்றும் எப்போதும் தமிழர்களின் (ஈழம் மற்றும் மலையகத் தமிழர்கள் இருதரப்பினதும்) நலன்களை தனது நலன்களுக்காக பலியிட்டு வரும் இந்தியா அதற்கு அனுமதிக்குமா என்றும் தமிழ் மக்கள் அச்சமடைகின்றார்கள்.


இத்தகைய சூழ்நிலையில் தமிழ்ப் பொது மக்களாகிய நாமே நேரடியாக 13ம் திருத்தத்தையும் அதன் வழி அமைந்த மாகாண சபை முறைமையையும் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஏற்கமாட்டோம் என மீண்டும் வெளிப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இன்றும் கூட சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு கூட்டாட்சித் தீர்வையே தமிழ் மக்கள் தமது அரசியல் தீர்வாக வேண்டி நிற்கின்றனர் என்பதை மக்களாகிய நாமே முன்வந்து நேரடியாக பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.


எமது அரசியல் அபிலாசைகளையும் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையையும் தனது நலன்களுக்கான இராஜதந்திரப்போட்டியில் பகடைக்காயாகப்பாவிப்பதற்கு இந்தியாவுக்கோ, புரிந்தோ புரியாமலோ அவர்களின் வலையில் வீழ்ந்து, 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தக் கோரியுள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கோ உரிமையில்லை என்பதையும் தமிழ் மக்கள் தமது எழுச்சிகள் மூலமே வலியுறுத்த முடியும்.


13வது திருத்தத்தை முழுமையாக அமுலாக்கக் கோருதல் என்ற உருமறைப்பில் தமிழ் மக்களின் இருப்பிற்கு எதிராக எழுந்துள்ள இப்பெரும் அச்சுறுத்தலை வெற்றி கொள்ள தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் உள்ள தமிழ் மக்கள் பெருமளவில் எழுச்சிகொண்டு 13ம் திருத்தத்தை அரசியல் தீர்வாக ஏற்கமாட்டோம், இறைமையுள்ள மக்கள் என்ற அடிப்படையில் எமக்குள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமையும் ஒரு அரசியற் தீர்வையே கோரி நிற்கின்றோம் என்பதை மீளவும் வலியுறுத்துவதே எம் முன்னாலுள்ள ஒரே வழியாகும்.

(ஓப்பம்) (ஓப்பம்)

அருட்தந்தை. வீ. யோகெஸ்வரன்.

இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்

பொ.ந. சிங்கம் – இணைப் பேச்சாளர்

தமிழ் சிவில் சமூக அமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More