ஏமன் உள்நாட்டுப் போரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹவுத்தி கிளர்ச்சி குழுவினரால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு எதிராக போராடும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளை போரிடுவதற்காக தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டிருப்பதாக, வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக பாதுகாப்புப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 300 பக்க அறிக்கையில், 2020 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் ஈடுபடுத்தப்பட்ட 1,406 குழந்தைகளின் பெயா்ப்பட்டியலை தாம் பெற்றுள்ளதாக தாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தும் வானவழித் தாக்குதல்கள் இன்னும் பல பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அதில் தொிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஏமன் அரசுக்கிடையே உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியதிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கில் பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர்.
“ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் முழக்கமான ‘அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம், யூதர்களை சபிக்கவும், இஸ்லாத்திற்கு வெற்றி’ என்ற முழக்கத்தை முழங்க அக்குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என 4 உறுப்பினர்கள் அடங்கிய அக்குழுவின் நிபுணர்கள் தொிவித்துள்ளதாக , ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“ஒரு முகாமில் 7 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆயுதங்களை சுத்தம் செய்யவும், ரொக்கெட்டுகளை தவிர்க்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம் பிபிசிதமிழ்