மன்னாரிற்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (2) காலை சென்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ மன்னார் நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின் நிலையத்தை பார்வையிட்டார்.
2014 ஆம் ஆண்டு தம்பபவனி காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நாட்டை மின்சாரம் மூலம் வலுப்படுத்துதல், நிலையான மின் விநியோகத்தை வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டது.
அதன் அடிப்படையில் இரண்டு பெரிய பருவக்காற்று களையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 13 கி.மீ மற்றும் 150 ஹெக்டேர் பரப்பளவு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவ் மின் உற்பத்தி நிலையத்தில் 90 மீ உயரமுள்ள டர்பைன் உயரம் கொண்ட 30 கோபுரங்கள் உள்ளன.
சுழலும் கத்திகளின் (காற்றாலைகள்) விட்டம் நூற்று இருபத்தி ஆறு மீட்டர் மற்றும் கோபுரம் 3.45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இத்திட்டத்தில் நடுக்குடா கிரிட் துணை மின் நிலையம் மற்றும் புதுகாமம், மன்னார் ஆகிய இடங்களில் இருந்து 36 கி.மீ தூரத்திற்கு மின் பரிமாற்ற அமைப்பு உள்ளது.
மொத்த மின் திறன் 103.5 மெகாவாட். இதனூடாக ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 08 ரூபாவிற்கும் குறைவான செலவாகும் என இலங்கை மின்சார சபை கூறுகிறது.
இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த, அதிநவீன காற்றாலை, உகந்த மின்சாரம் வழங்குவதற் கான பல சிறப்புத் தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக இத்திட்டம் கருதப்படுகிறது.
“தம்பபவனி காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மேலும் 50 மெகாவாட்டை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதன் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, புதிய காற்றாலைகள் அமைக்க கூடிய இடங்கள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
தற்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 248 மெகா வாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் அதனை விளம்பர படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது மற்றும் மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி கண்காணிப்பதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.
2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து பெறுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் குறைந்த விலை மின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்கவும் இது நோக்கமாக உள்ளது.
குறித்த பயணத்தில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, கே.எச்.டி.கே. சமரகோன், மின்சார சபையின் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன், பதில் பொது முகாமையாளர் ரொஹந்த அபேசேகர மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.