வடமேற்கு சிரியாவில் அமெரிக்க சிறப்புப் படைகள் நேற்று புதன்கிழமை இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) என அழைக்கப்படும் குழுவின் மூத்த தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி கொல்லப்பட்டதாக அமொிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷியின் மரணத்தின் மூலம் “உலகின் முன்னிருந்த ஒரு பெரிய பயங்கரவாத அச்சுறுத்தல் நீங்கியுள்ளது,” என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினரின் ராணுவ நடவடிக்கையின் கடைசி கட்டத்தில், குரேஷி ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து தன்னையும் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களின் உயிரையும் மாய்த்துக் கொண்ட செயலானது கோழைத்தனமான விரக்தியின் அடையாளம்” என பைடன் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குப் பின்னா் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் 13 பேரின் உடல்கள் கிடைத்ததாக சிரியாவின் மீட்புக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கையானது, வடக்கு இட்லிப் மாகாணம் மற்றும் துருக்கியின் எல்லைக்கு அருகே உள்ள எதிர்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அட்மேஹ் நகரின் புறநகரில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டடத்தை இலக்கு வைத்து நடைபெற்றுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் சட்டத் திட்டத்தின் நீதிபதிகளில் ஒருவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரேஷி , அல் பாக்தாதி இறப்புக்கு முன் பொதுவெளிகளில் அதிகம் அறியப்படாதவராக இருந்துள்ளார்.
பின்னா் அல் பாக்தாதியின் இறப்புக்கு பின்னா் அவரின் வலதுகரம் போல இருந்த அப்துல்லா கரதாஷ் என்பவர் ஐஎஸ்ஐஎஸ் புதிய தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் யாருக்கும் அதிகம் அறிமுகம் இல்லாத அல் குரேஷி தலைவரானார்.
அல் குரேஷி. தலைவராக பொறுப்பேற்ற அன்றே அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பை, கோட்டிக்கார கிழவன் என வம்பிழுத்ததோடு, அல் பாக்தாதியைக் கொன்றுவிட்டதாக மகிழ்ச்சிகொள்ள வேண்டாம். இதற்கு நாங்கள் பழிவாங்குவோம் என சபதமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.