இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கோரிக்கையை அனுப்பும் நோக்கத்தோடு ஆறு கட்சிகள் ஒன்றாக உழைத்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போட வேண்டியதன் அவசியம் குறித்து நான் எழுதியும் பேசியும் வந்தேன். ஆனால் அக்கொழுக்கி 13 ஆக இருக்க வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன். அந்நாட்களில் எனது நண்பர் ஒருவர் -அவர் ஒரு சிவில் சமூக செயற்பாட்டாளர்,அதோடு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்- என்னிடம் கேட்டார் இந்தியாவை நோக்கி ஒரு கொழுக்கியைப் போடும் பலம் இந்த ஆறு கட்சிகளிடமும் இருக்கிறதா? என்று. நான் அவருக்குச் சொன்னேன் “இல்லை. இப்போதுள்ள நிலைமைகளின்படி அவர்களுக்கு அந்தப் பலம் இல்லை. ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் அந்தப் பலம் இல்லை” என்று.
ஏனெனில் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்ப்பரப்பில் செயலுக்கு போகாத பிரகடனங்களும்.தீர்மானங்களும்.வாக்குறுதிகளும் ,மக்களாணைகளும்தான் உண்டு. எந்த ஒரு தமிழ் தேசியக் கட்சியும் தனது இறுதி இலட்சியத்தை முன்வைத்து தொடர்ச்சியாக போராடவில்லை, ரிஸ்க் எடுக்கவில்லை.தெட்டந் தெட்டமான மக்கள் எழுச்சிகள், சிறிய கவனயீர்ப்பு போராட்டங்கள்,போன்றவற்றுக்கும் அப்பால் தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் சக்தி தங்களுக்கு இருப்பதாக இதுவரையிலும் எந்த ஒரு தமிழ் கட்சியும் நிரூபித்திருக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் இப்பொழுது தமிழ்த் தேசிய அரசியல் பரப்பானது இந்தியாவுக்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் இரண்டுபட்டு நிற்கிறது. பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி வைத்திருக்கின்றன. அதேசமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அந்த ஒருங்கிணைப்புக்குள் இணைய மறுத்ததோடு மேற்படி ஆறு கட்சிகளுக்கும் எதிராக ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் கிட்டு பூங்காவில் நிகழ்த்தியிருக்கிறது.
கிட்டு பூங்காவில் நடந்த ஆர்ப்பாட்டமானது,இந்தியாவுக்கும் ஆறு கட்சிகளுக்கும் உள்ள பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது எனலாம்.அவ்வாறான ஆர்ப்பாட்டமொன்றை ஒழுங்குபடுத்தும் சக்தி தனக்கு உண்டு என்பதனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிரூபித்திருக்கிறது. அதை அவர்கள் இப்பொழுதுதான் நிரூபிக்க வேண்டும் என்று இல்லை. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளில் நடந்த எழுக தமிழ் போன்ற போராட்டங்களில் மக்களை தெருவுக்கு கொண்டு வந்ததில் அக்கட்சிக்கும் முக்கிய பங்கு உண்டு.ஆனால் ஒரு நாள் எழுச்சி மட்டும் போதாது. டெல்லியில் வேளாண் மசோதாவுக்கு எதிராக மாதக்கணக்கில் விவசாயிகள் போராடியதைப்போல தொடர்ச்சியாகப் போராடினால்தான் இந்தியாவும் திரும்பிப் பார்க்கும்;இலங்கையும் திரும்பிப் பார்க்கும்;ஏன் மக்கள் மத்தியிலும்கூட ஒரு விழிப்பு ஏற்படும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை இப்பொழுது பதின்மூன்றாவது திருத்தம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல பிரச்சினை.எரிவாயு கிடைக்குமா கிடைக்குமா? யோக்கெட் இல்லாமல் பால்மா கிடைக்குமா? பொருட்களின் விலை குறையுமா?என்பதே அவர்களுடைய பிரச்சனை.இந்த பிரச்சினைகளுக்குள் அவர்களுடைய கவனத்தை ஓர் அரசியல் இலக்கின் மீது குவிப்பது என்பது கட்சிகளின் உழைப்பில்தான் தங்கியிருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக எந்த ஒரு கட்சியும் அவ்வாறு தொடர்ச்சியாக உழைக்கவில்லை.
எனது கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது போல, பொங்கலுக்கு முதல் நாள் முற்றவெளியில் நடந்த ஒரு கவனயீர்ப்பு பொங்கலில் எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் காணமுடியவில்லை.திரளான மக்களையும் காணவில்லை. நேற்றுமுன்தினம் சுதந்திர தினத்தன்று நடந்த எழுச்சிகளும் ஒரு நாள் போராட்டங்களே. ஒருநாள் மக்கள் எழுச்சிகளை தொடர்ச்சியான போராட்டங்களாக மாற்றும் போதுதான் ஒர் அரசியல் இயக்கம் அல்லது கட்சி அதன் இறுதி வெற்றியை பெறமுடியும்.இது எல்லா தமிழ் தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும்.
கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்தேசியப் பரப்பில் அதிகம் புவிசார் அரசியல் குறித்தும் பூகோள அரசியலை குறித்தும் பேசி வந்த கட்சி முன்னணிதான். எனக்கு ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை.2013 என்று நினைக்கிறேன்.யாழ்,மறைக்கல்வி நிலையத்தில் நடந்த ஒரு சந்திப்புக்குப் பின் கஜேந்திரகுமாரிடம் நான் கேட்டேன்” புவிசார் அரசியல் எப்படி கையாளப் போகிறீர்கள் அதற்கான வழி வரைபடம் என்ன” என்று. அவர் சொன்னார் அதற்குரிய மக்கள் ஆணையைப் பெற்று வெளிநாடுகளை அணுக வேண்டும் என்று. கூட்டமைப்பிலிருந்து விலகி வந்தபின் கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி இரண்டு நாடாளுமன்ற ஆசனங்கள் வரையிலும் முன்னேறி இருக்கிறது. எனினும் அந்த வெற்றியைக் கூட கொண்டாட முடியாதபடி மணிவண்ணனின் பிரிவு அக்கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த இரண்டு ஆசனங்கள் அக்கட்சி முன்வைக்கும் வெளியுறவு இலக்குகளை நோக்கி பேரம் பேசுவதற்கு போதுமானவை அல்ல. அண்மையில் நடந்த ஒரு கிளப் ஹவுஸ் சந்திப்பில் கஜேந்திரகுமாரிடம் அதுபற்றி கேட்கப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக புவிசார் அரசியல் குறித்து அதிகம் பேசி வந்த நீங்கள் இதுவிடயத்தில் எதை சாதித்திருக்கிறீர்கள் என்ற தொனிப்பட்ட கேட்கப்பட்ட பொழுது அவ்வாறு புவிசார் மற்றும் பூகோள அரசியலை கையாள்வதற்கு இப்போதுள்ள இரண்டு நாடாளுமன்ற ஆசனங்கள் போதாது என்ற தொனிப்பட பதில் கூறியிருக்கிறார்.
அதில் உண்மை உண்டு. அதைத்தான் நான் தொடர்ச்சியாக கூறி வருகிறேன். வெளி விவகாரத்தை கையாள்வது என்பது முதலில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு அல்லது கட்சி தன் மக்கள் மத்தியில் ஒரு “பவர் சோர்ஸ்” ஆக பல மையமாக தன்னை ஸ்தாபிப்பதில் இருந்தே தொடங்குகிறது.வெளிவிவகாரம் எனப்படுவது ஒரு பல மையம் ஏனைய பல மையங்களோடு வைத்துக்கொள்ளும் இடையூடாட்டம்தான்.இந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தனது வெளியுறவு இலக்குகளை நோக்கி உழைப்பதற்கு முதலில் தனது பலத்தை அதிகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருநாள் எழுச்சிப் போராட்டங்கள் அந்தப் பாதையில் அவர்களுக்கு பலம் சேர்க்கலாம். ஆனால் அவை மட்டும் போதாது.அதற்கும் அப்பால் தாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செய்யத் தவறியவற்றை இனிமேலாவது நிரூபித்துக் காட்ட வேண்டியிருக்கிறது.
ஈழத்தமிழர்களின் அரசியலானது வழமையான ஒரு மிதவாத அரசியல் அல்ல.ஆயுத மோதல்களுக்கு பின்னரான அரசியல் அது. இனப்படுகொலை ஒன்றின் மூலம் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் அரசியல். ஒரு தேசத்தை நிர்மாணிப்பதற்கான வெளியுறவுக்கொள்கை எனப்படுவது முதலாவதாகவும் அடிப்படையாகவும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் இருந்துதான் தொடங்குகிறது. ஆனால் தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுவதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த 10 ஆண்டுகளில் போதிய வெற்றிகளைப் பெறத்தவறியிருக்கிறது. இப்பொழுதும் கூட பெரும்பான்மை கட்சிகள் இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கும் ஒரு பின்னணியில் முன்னணி மட்டும் தனித்து நிற்கின்றது. தனது வெளியுறவு இலக்குகளை முன்வைத்து விடாது உழைப்பதன் மூலம் தனது இலட்சியம் சரியானது என்பதை நிரூபிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் அக்கட்சிக்கு இப்பொழுது உண்டு.13 க்கு எதிராக போராடியதைப் போன்று சமஸ்டியை கேட்டும் ரிஸ்க் எடுத்துப் போராட வேண்டும்.
இந்தியாவை நோக்கி ஒரு கூட்டு கோரிக்கையை முன் வைப்பதில் தமக்கு ஆட்சேபனைகள் கிடையாது என்று அக்கட்சியின் செயலாளர் கிட்டு பூங்கா எழுச்சிக்கு முதல் நாள் எனக்கு தனிப்பட்ட முறையில் சொன்னார். ஆனால் கிட்டு பூங்கா பிரகடனமும் உட்பட அக்கட்சியின் நடவடிக்கைகளை தொகுத்துப் பார்த்தால் அது நடைமுறையில் இந்தியாவை அணுகத் தேவையான சாத்திய வெளிகளைத் திறக்கும் ஒர் அரசியல் அல்ல.அப்படியென்றால்,அக்கட்சியின் பூகோள அரசியல் வழிவரைபடத்தின்படி வேறு எந்த நாடுகளை அணுக வேண்டும் என்று அக்கட்சி நம்புகின்றது ? தனது வெளியுறவு அணுகுமுறைக்கு வேண்டிய அமைப்புக்களை அக்கட்சி கொண்டிருக்கிறதா? ஆகிய கேள்விகளுக்கு அவர்கள் பதில் கூற வேண்டும்.
இதே கேள்விகளை இந்தியாவுக்கு கூட்டு கோரிக்கைகளை வைத்த கட்சிகளிடமும் கேட்கலாம். வெளிவிவகார அணுகுமுறை என்பது ஒரு கடிதத்தோடு முடிகிற விவகாரம் அல்ல.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள அரசுக்கும்-அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவை நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டு இந்தியா தமிழ் மக்களை நோக்கி வரக் கூடிய நிலைமைகள் இன்னமும் ஏற்படவில்லை. கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை பகைக்காத ஒரு தீர்வைத்தான் இந்தியா தமிழ் மக்களுக்கு தரலாம் என்றால் அது நிச்சயமாக 13 தாண்டாது. தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய எந்த ஒரு தீர்வின் பருமனும் புது டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான நட்பின் பருமனுக்கு நேர் விகித சமனானது.
எனவே புது டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் முரண்பாடுகள் அதிகரிக்கும் போதுதான் ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கக்கூடிய தீர்வின் பருமனும் அதிகரிக்கும். இது விடயத்தில் இந்தியாவை தமிழ் மக்களுக்கு சாதகமாக தலையிட வைக்கும் சக்தி மேற்படி ஆறு கட்சிகளுக்கும் உண்டா? அதற்காக உழைக்கத் தேவையான வழிவரைபடத்தையும் அமைப்புக்களையும் அக்கட்சிகள் கொண்டிருக்கின்றனவா? அதற்காக ரிஸ்க் எடுக்க,அர்ப்பணிக்க அக்கட்சிகள் தயாரா?
கடந்த 12 ஆண்டுகளாக ஜெனிவாவை கையாள்வதற்கும் அமெரிக்காவை கையாள்வதற்கும் இந்தியாவை கையாள்வதற்கும் தாயகத்தில் தமிழ் மக்களிடம் கட்டமைப்பு சார்ந்த சிந்தனைகள் எவையும் இருக்கவில்லை. ஒரு பொருத்தமான வெளியுறவுக் கொள்கையோ வெளியுறவு கட்டமைப்போ இருப்பதாக தெரியவில்லை. வெளியுறவுக் கொள்கைகள் ராணுவ ரகசியங்கள் அல்ல. கொள்கைகளை நடைமுறைப் படுத்தும் உத்திகள்தான் ரகசியமாக இருக்க முடியும்.தமிழ்க் கட்சிகள் எவரிடமும் அவ்வாறு வெளியுறவு கட்டமைப்புக்கள் இருப்பதாக தெரியவில்லை.
இவ்வாறான ஒரு வெற்றிடத்தில்தான் டெலோ இயக்கத்தின் முன் முயற்சியால் இந்தியாவுக்கு ஒரு கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்டது. இங்கு மறுபடியும் அழுத்திக் கூற வேண்டும் ஒரு வெளியுறவு கட்டமைப்பு இல்லாத வெற்றிடத்தில்தான் அவ்வாறு 6 கட்சிகள் இணைந்து ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கின்றன. இதுதான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நிலையும்.
இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில், கிட்டு பூங்கா பிரகடனத்திற்கு பின் தமிழ் அரசியலில் இது வேறு வெளியுறவு அணுகுமுறைகள் துலக்கமாக மேலெழத் தொடங்கிவிட்டன. ஆனால் இந்த இரு வேறு வெளியுறவுப் போக்குகளும் பிரகடனங்களாகவும்,கூட்டுக் கோரிக்கைகளாகவும் மட்டுமே இப்பொழுது காணப்படுகின்றன.வெளியுறவு அணுகுமுறை எனப்படுவது ஒரு கூட்டுக் கோரிக்கையோ அல்லது பிரகடனமோ அல்ல.அது ஒரு நடைமுறை; அது ஒரு செயல் வழி.ஓர் அரசற்ற மக்கள் கூட்டமாகிய ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை வெளியுறவு அணுகுமுறை எனப்படுவது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பகுதி. இனப்பிரச்சினை எனப்படுவது சாராம்சத்தில் ஓர் அனைத்துலக பிரச்சினைதான். அதற்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. எனவே அனைத்துலகத் தரப்புகளை கையாள்வதற்கு வெளியுறவுக் கொள்கை மிக முக்கியம். அந்தக் கொள்கையை செயல்படுத்த உரிய கட்டமைப்புகள் அவசியம்.கட்டமைப்புக்களுக்கூடாக உழைக்க வேண்டும்,ரிஸ்க் எடுக்க வேண்டும்.
எனவே ஆறு கட்சிகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தனித்தனியே தமது இறுதி இலக்குகளை நோக்கி உழைக்கட்டும். யாருடைய வெளிவிவகார அணுகுமுறை தீர்க்கதரிசனம் மிக்கது என்பதனை வரலாறு நிரூபிக்கும். அந்தனியோ குரொம்சி கூறுவதுபோல புரட்சிகரமான அரசியல் என்பது, வரலாற்றில் செயலூக்கமிக்க வகையில் தலையீடு செய்வதுதானேயன்றி, ‘சரியான’ நிலைப்பாடுளை மேற்கொள்வதும் அவை சரியானவைதான் என நிரூபிக்கப்படப்போகும் நாளுக்காக காத்திருப்பதுமல்ல.