இந்திய பிரதமர் மோடி கொழும்பில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் இந்திய அரசாங்கம் அதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
அவ்வாறு நரேந்திர மோடி இலங்கைக்கு வருவாராக இருந்தால் இங்கே,அவர் தனக்கு ஒரு கூட்டுக்கோரிக்கையை முன்வைத்த ஆறு கட்சிகளையும் சந்திப்பாரா?
அவ்வாறு அவர் சந்தித்தால்தான் அந்த ஆறு கட்சிகளும் இந்தியாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைக்கு ஒரு பொருள் இருக்கும். இல்லையென்றால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறுவதுபோல அந்த ஆறு கட்சிகளும் தன்மானத்தை இழந்து இந்தியாவை சரணடைந்து விட்டன என்ற குற்றச்சாட்டு சரியாகிவிடும். அந்த ஆறு கட்சிகளும் இந்தியாவுக்கு அனுப்பிய கூட்டுக் கோரிக்கை தொடர்பில் எனக்கு கேள்விகள் உண்டு.அந்த ஆவணம் வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கு நிலையாகும். ஆனால் தமிழ்த் தரப்பில் உள்ள ஒப்பீட்டளவில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஆறு கட்சிகள் இணைந்து அவ்வாறு ஒரு கோரிக்கையை முன்வைத்திருப்பது என்பது ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை பொறுத்தவரையிலும் மூலோபாய முக்கியத்துவம் மிக்கது. ஏன் அவ்வாறு மூலோபாய முக்கியத்துவம் என்று கூற வேண்டியுள்ளது?
ஏனெனில் ஈழப்போரின் முதலாவது கட்டத்தில் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியது.பின்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தது. சிறிய கெரில்லாப் போராட்டமாக இருந்த ஈழப்போர் முழு அளவிலான ஒரு போராக வளர்ச்சி அடைவதற்கு இந்தியாவின் உதவியே பிரதான காரணமாகும். ஆனால் இந்திய இலங்கை உடன்படிக்கையானது இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான உறவில் கசப்பான இரத்தம் சிந்தும் இடைவெளிகளை ஏற்படுத்தியது. இந்திய அமைதிகாக்கும் படையை நாட்டைவிட்டு அகற்றும் நோக்கத்தோடு புலிகள் இயக்கத்துக்கும் அப்போதிருந்த ஜனாதிபதி பிரேமதாசவுக்கும் இடையில் ஒரு தந்திரோபாய கூட்டு உருவாகியது. அதன் விளைவாக இரண்டு தரப்பும் இணைந்து இந்திய அமைதிகாக்கும் படையை நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டன. எந்த இரண்டு தரப்புக்கும் இடையிலான மோதல்களை சமாதானம் செய்வதற்காக இந்திய அமைதி காக்கும் படை இலங்கைககுள் இறங்கியதோ அந்த இரண்டு தரப்புக்களும் ஒற்றுமைப்பட்டு அமைதிகாக்கும் படையை வெளியே போ என்று கேட்டபொழுது இந்திய அமைதி காக்கும் படை பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது இந்தியாவை பொறுத்த வரையிலும் அவமானகரமான ஒரு வெளியேற்றம்.
இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. இது நடந்து கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று ஆண்டுகளின் பின் எந்த ஒரு தமிழ்த் தரப்பு இந்திய அமைதிகாக்கும் படையை வெளியேறுமாறு கேட்டதோ,அதே தமிழ்த் தரப்பிலிருந்து மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மொத்தம் 11 பிரதிநிதிகள் அடங்கிய மொத்தம் 6 கட்சிகளின் கூட்டு இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறது. அக்கோரிக்கையானது இந்தியாவை மறுபடியும் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக தலையிடுமாறு அழைக்கும் நோக்கிலானது என்று அக்கட்சிகள் தெரிவிக்கின்றன.
முதலாம் கட்ட ஈழப்போரில் தமிழ் மக்கள் தமது நம்பிக்கைகளை இந்தியாவின் மீது முதலீடு செய்தார்கள். எனது கடந்த வாரக் கட்டுரையில் கூறியதுபோல ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கும் தமக்கும் இடையிலான இன, மொழி, பண்பாட்டுப் பிணைப்புக்கூடாகவே இந்திய நடுவண் அரசை நோக்கினார்கள். ஆனால் இந்தியா ஈழத்தமிழர்களை அவ்வாறு அணுகவில்லை. மாறாக தனது பேரரசு நலன்களின் அடிப்படையில்தான் அணுகியது.அதிலிருந்து ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. இப்பொழுது கிட்டத்தட்ட முப்பத்தி நான்கு ஆண்டுகளின் பின் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பதினொருவர் இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக்கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள்.
அக்கோரிக்கையின் பெயரால் இந்தியா இலங்கைத் தீவின் அரசியலில் தமிழ் மக்களுக்குச் சார்பாக தலையிடுவதற்கு ஒரு புதிய வாய்ப்பு திறக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகளில் அதிகமானவர்கள் கூட்டாக இந்தியாவை அழைத்திருக்கிறார்கள். அவ்வாறு தமிழ் மக்களின் பெயரால் தலையிடுவதன்மூலம் இந்தியா தனது தெற்கு மூலையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிப்பதற்கு எதிராக தமிழ் மக்களோடு இணைந்து ஒரு புதிய வியூகத்தை வகுப்பதற்கான வாய்ப்புகளும் திறக்கப்பட்டுள்ளன.இந்த அடிப்படையில் சிந்தித்தால், ஆறு கட்சிகளின் கோரிக்கைக்கு இந்தியா காட்டப்போகும் பதில்வினையானது அந்த ஆறு கட்சிகளின் எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கப் போகிறது.அதோடு இந்தியாவின் தெற்கு மூலையில் சீனாவுக்கு எதிரான புதிய வியூகங்களுக்கான புதிய வாய்ப்புகளையும் அது தீர்மானிக்கும்.இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் பலவீனப்பட்டால் அது இந்தியாவின் தெற்கு மூலையைப் பலவீனப்படுத்தும் என்பதே கடந்த பன்னிரண்டு ஆண்டுகால அனுபவம் ஆகும்.
எனவே இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருவாராக இருந்தால் மேற்படி ஆறு கட்சிகளையும் சந்திப்பாரா என்பது முக்கியத்துவம் உடையது.இந்தியா தனது பிராந்தியப் நலன்களை முன்னிறுத்தித்தான் ஈழத் தமிழர்களின் விவகாரத்தை கையாண்டு வருகிறது என்று பெரும்பாலான படித்த ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். இதுவிடயத்தில் ஈழத்தமிழர்களின் நம்பிக்கைகளை வென்றெடுக்கும் விதத்தில் புதிய பிரகாசமான சமிக்கைகளை காட்ட வேண்டிய ஒரு பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியா கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் கையாண்டு வருகிறது. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் அடிப்படையிலான உலகப் பொதுவான ஒரு ராஜிய வழமை அது.ஆனால் இவ்வாறு கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தை கையாள முடியாது போகும் பொழுது ஈழத்தமிழர்களை ஒரு கருவியாகக் கையாண்டு இந்தியா கொழும்பை பணிய வைக்கிறது என்பதும் கடந்த நான்கு தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
எனவே இந்தியா தங்களை ஒரு கறிவேப்பிலையாக அல்லது பலியாடாக பயன்படுத்துகிறது என்ற ஈழத்தமிழர்களின் சந்தேகத்தையும் குற்றச்சாட்டுகளையும் கவனத்தில் எடுத்து ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. இது தொடர்பில் இந்தியா ஒரு சிறப்புத் தூதுவரை நியமிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டா? அல்லது திரும்பத் திரும்ப ஒற்றையாட்சிக்குட்பட்ட அரைகுறைத் தீர்வைத்தான் வலியுறுத்துமா? மேலும்,யாழ்ப்பாணத்தில் இந்தியாவால் கட்டப்பட்டிருக்கும் கலாச்சார மையம், பலாலி விமான நிலையத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தி, காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான படகுப் போக்குவரத்து போன்ற விடயங்களிலும் நிச்சயமற்ற நிலைமைகள் காணப்படுகின்றன. மோடி வருவாராக இருந்தால் இத்திட்டங்கள் அவற்றின் அடுத்த கட்டத்துக்கு விரிவுபடுத்தப்படுமா?
தமிழ்ப்பகுதிகளில் உள்ள மிக உயரமான பொதுக் கட்டிடமாகவும்,கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் நீண்ட நாட்களுக்கு திறக்கப்படாத ஒரு கட்டிடமாகவும் காணப்படும் மேற்படி கலாச்சார மையத்தை திறப்பதில் உள்ள தடைகள் யாவும் கொழும்புக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் உள்ள நெருக்கமி ன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றன. அதுபோலவே பலாலி விமான நிலையத்தின் அடுத்தகட்ட அபிவிருத்தியும் இதோ தொடங்குகிறது என்று பலதடவைகள் திகதி அறிவிக்கப்பட்ட போதிலும் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் முதலாம் திகதி தமிழக சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதாவின் தமிழ்ப் பிரமுகருமான வானதி சீனிவாசன் ஒரு ட்விட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார். அதிலவர் காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கு இடையிலான படகுப் போக்குவரத்துக்கான வர்த்தக உடன்படிக்கை வெற்றிகரமாக எழுதப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.இப்பொழுது கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. ஆனால் அந்தப் படகுப் பயணம் மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரின் கனவுகளாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது.
மேற்கண்ட திட்டங்கள் யாவும் ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கனெக்றிவிற்றியைப் பலப்படுத்தும் நோக்கிலானவை. ஆனால் இத்திட்டங்கள் அவற்றின் தொடக்க நிலையிலேயே உள்ளன.அவை அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிகளுக்கு போகமுடியவில்லை. இது தமிழ் மக்கள் சார்பாக இந்தியா கொழும்பின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாமல் இருப்பதை காட்டுகிறது.மேற்படி திட்டங்களை வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு விரிவுபடுத்துவதன்மூலம் இந்தியா தனது பலத்தை நிரூபிக்குமா?
எனவே தொகுத்துகூறின் தமிழ்த் தரப்பிலிருந்து இப்பொழுது ஒரு கூட்டு கோரிக்கை – அக்கோரிக்கை தொடர்பாக விமர்சனங்கள் உண்டென்ற போதிலும்- இந்தியாவை நோக்கி முன் வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தரப்பு அவ்வாறு கூட்டாகக் கேட்டிருக்கும் ஒரு பின்னணியில், இந்தியா தமிழ்த் தரப்பை நோக்கி எப்படிப்பட்ட சமிக்கைகளை காட்டப்போகிறது என்பது முக்கியத்துவமுடையது.அதாவது இப்பொழுது பந்து இந்தியாவின் கைகளில்தான் உள்ளது .