யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு – அலம்பில் பகுதிக்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட 13 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, தலா 02 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈட்டை செலுத்துவதாகவும் சமாதான ரீதியில் சிக்கலை நிவர்த்திப்பதாகவும் சந்தேகநபர்கள் சார்பில் மன்றுக்கு உறுதியளித்ததையடுத்து, சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ். காங்கேசன்துறை, நல்லிணக்கபுரம், மாவிட்டபுரம் மற்றும் கீரிமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே பிணை வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு – அலம்பில் பகுதிக்கு மினி பஸ் ஒன்றில் சென்றவர்களால் நேற்று முன்தினம்(20) பிற்பகல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்த 05 பேர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அலம்பில் பகுதியை சேர்ந்த மூவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.