Home உலகம் “ஐரோப்பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும் ஒரு திருப்புமுனை” -போர் குறித்து மக்ரோன் விசேட உரை

“ஐரோப்பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும் ஒரு திருப்புமுனை” -போர் குறித்து மக்ரோன் விசேட உரை

by admin

பிரான்ஸின் அதிபர் மக்ரோன் இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு விசேடஉரை ஒன்றை ஆற்றியுள்ளார். மிக அரிதான நிகழ்வாக அந்த உரை நாளை நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாசிக்கப்படவுள்ளது.

போர்க் காலத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டைவெளியிடுகின்ற ஓர் உறுதி உரையைப் போன்று அவரது சிற்றுரை அமைந்திருந்தது. அவரது உரைக்கு முன்பாக நாட்டின் தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் எலிஸே மாளிகையின் ஜூபிட்டர் கட்டளைப் பீடத்தில் (Jupiter command post)நடைபெற்றது.

மாளிகையின் நிலத்தடியில் உள்ள போர்க்கால உத்தரவுகள், அணுவாயுதங்களை இயக்குவதற்கான பணிப்புகளை வழங்கும் கட்டளைப் பீடமே “ஜூபிட்டர் பீடம்” என்று அழைக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வாயிலில் போர் மூண்டிருப்பதால் ஒன்றிய நாடுகளது தலைமைப் பொறுப்பை வகிக்கின்றநாடு என்ற வகையில் பிரான்ஸின் முன்னெடுப்புகள் இந்தப் போர்க்காலப்பகுதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.

அதேசமயம் உக்ரைன் நெருக்கடியைத் தணிப்பதற்காக புடினுடன் பல தடவைகள் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் சமரச முயற்சிகளை முன்னெடுத்து வந்த ஒரே தலைவர் மக்ரோன் ஆவார். போரில் நேரடியாகத் தலையிடாத – தலையிட முடியாத-நிலையில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பா உட்பட்ட மேற்குலகம் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப் போகின்ற நடவடிக்கைகளைக் காண்பதற்காக உலகம் காத்திருக்கின்ற இவ் வேளையில்,”பலவீனம் இல்லாத ஒரு பதிலடி நிச்சயம்” என்று மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

பல மாத கால ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் போரைத் தொடக்கியமைக்காக ரஷ்ய அதிபர் மீது கடும் கண்டனத்தை தெரிவித்த மக்ரோன்,”பிரான்ஸ் உக்ரைன் மக்கள் பக்கம் நிற்கிறது” என்று அறிவித்தார்.

போரைத் தவிர்ப்பதற்கு எல்லாவற்றையும் செய்துள்ளோம்.செய்து வருகிறோம்.ஆனால் புடின் வாக்குறுதிகளை மீறிவிட்டார். பல தசாப்தங்களாக ஐரோப்பாவில் நீடித்த அமைதி, ஸ்திரத்தன்மை என்பவற்றின் மீது அவர் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.

அவரது போர்ச் செயலுக்கு நாங்கள் பலவீனம் இல்லாமல் பதிலளிப்போம். இந்த இரவின் நிகழ்வுகள் ஐரோப்பாவின் வரலாற்றிலும் நம் வாழ்விலும்ஒரு திருப்புமுனை. இது ஐரோப்பா கண்டத்தினது புவிசார் அரசியலிலும், எங்கள்தனிப்பட்ட வாழ்க்கையிலும் விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்ஸ் அதன் அனைத்து வடிவங்களிலும் உக்ரைனுக்கான தனது ஆதரவை மேலும் வலுப்படுத்தும்.

கடந்த காலப் பிசாசுகள் மீண்டும் பிறப்பெடுக்கின்ற இந்தக் காலகட்டத்தில் எங்கள் ஒற்றுமையை விட்டுக் கொடுக்கமுடியாது. இந்த நெருக்கடியின் நேரடியானதும் மறைமுகமானதுமான விளைவுகளில் இருந்து பிரெஞ்சு மக்களைப் பாதுகாப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.-இவ்வாறு மக்ரோன் தனது உரையில்தெரிவித்தார்.

அதிபர் மக்ரோன் உரையாற்றிய சமயத்தில் அவருக்குப் பின்புறத்தில் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றினது கொடிகளுடன் உக்ரைன் நாட்டின் கொடியும் காணப்பட்டது. இன்றைய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் உள்துறை, இராணுவம், வெளிவிவகாரஅமைச்சர்கள், பிரதமர் உட்பட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மக்ரோன் நாளை, முன்னாள் அதிபர்களான நிக்கலஸ் சார்க்கோஷி, பிரான்ஷுவா ஹொலன்ட் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

——————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 24-02-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More