Home உலகம் கருங்கடல் பாம்புத் தீவை காக்க போரிட்டு மடிந்த 13 சிப்பாய்கள்!உக்ரைன் கௌரவித்து மரியாதை

கருங்கடல் பாம்புத் தீவை காக்க போரிட்டு மடிந்த 13 சிப்பாய்கள்!உக்ரைன் கௌரவித்து மரியாதை

by admin

(கருங்கடலில் உக்ரைனின் முதல்காவல் நிலையான பாம்புத் தீவு.)

தற்போதைய சண்டையில் கருங்கடல்கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. உக்ரைனை விடவும் அந்தக் கடல் பகுதி ஆதிக்கம் ரஷ்யாவின் நீண்ட கால இலக்காக இருந்து வருகிறது. கடந்த வியாழன் அதிகாலை ரஷ்யா போரைத் தொடக்கியபோது முதலில்உக்ரைனுக்குச் சொந்தமான கருங்கடல்தீவில் படை இறக்கம் ஒன்றைச் செய்தது

பாம்புத் தீவு (Snake Island) என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற அந்தச் சின்னஞ்சிறிய தீவை உக்ரைன் எல்லைக்காவல் படையைச் சேர்ந்த 13 வீரர்கள்கடைசிவரை நின்று காவல்காத்து வந்தனர். Serpent Island என்றும் சொல்லப்படும் அந்தத் தீவை நெருங்கிய ரஷ்யக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இருந்து 13 வீரர்களையும் சரணடையும் படி செய்தி அனுப்பப்பட்டது. அதை ஏற்க மறுத்த அவர்கள் கடைசி வரை சரணடைய மறுத்துப் போரிட்டு உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

ரஷ்யாவிடம் மண்டியிட மறுத்த அந்த வீரர்கள் எதிரிக்கு அனுப்பிய கடைசி வீடியோச் செய்தி உலகெங்கும் சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. நெட்டிசன்கள் அதனைப் பகிர்ந்து வருகின்றனர். சண்டையில் சக படைப் பிரிவுகள் பின்வாங்கிய பிறகும் தீவை விட்டு வெளியேற மறுத்து அங்கேயே நின்றுபோரிட்ட13 எல்லைக் காவல் வீரர்களும் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் அழிக்கப்பட்டனர் என்பதை உறுதிசெய்துள்ள உக்ரைன் அதிபர் , அவர்களது வீரத்தையும் தேசப்பற்றையும் மதித்து “நாட்டின் நாயகர்களாகக் (“heroes of Ukraine.”) கௌரவித்திருக்கிறார்.

இதேவேளை, வரலாற்றில் மிகப் பேரழிவை ஏற்படுத்திய அணுக் கசிவு விபத்து நடைபெற்ற செர்னோபில் (Chernobyl) பிரதேசத்தைக் கடும் சண்டைக்குப் பிறகு ரஷ்யப் படைகள் கைப்பற்றி விட்டன என்பதை உக்ரைன் அரசு உறுதிசெய்திருக்கிறது

.செர்னோபிலில் அமைந்திருந்த அணு ஆலையின் நான்கு உலைகளில் ஒன்றில் கடந்த 1986 ஆம் ஆண்டு வெடிப்பு ஏற்பட்டது.பெரும் அணுக்கசிவினால் அயல் பிரதேசங்கள் அழிந்தன.இன்னமும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றஆலை தற்சமயம் இரும்புப் போர்வைக்குள் மூடப்பட்டு அணுக்கதிர் வீச்சு அபாயம் தடுக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதியில் இடம்பெறுகின்ற சண்டையின்போது அணு உலை தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உக்ரைனின் வடக்கே பெலாரஸ் எல்லையில் தலைநகர் கீவில் இருந்து 90 கிலோமீற்றர் தொலைவில் செர்னோபில் அமைதுள்ளது. உக்ரைன் படைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட செர்னோபில் பிராந்தியத்தின் வீழ்ச்சி ரஷ்யப் படைகள் பெலாரஸ் வழியாகக் கீவை நெருங்கி வருவதையே காட்டுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் ஐரோப்பாவின் ஏனைய எல்லைகளுக்குள் பரவாது தடுக்க வேண்டும் என்று ஜேர்மனியசான்சிலர் ஒலப் சோல்ஸ் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்களை வைத்துள்ள உலக சக்திகள் போரில் சம்பந்தப்பட்டிருப்பதால் உக்ரைன் போர்ப் பதற்றம் எல்லை கள் தாண்டி உலகெங்கும் பரவியிருக்கிறது.

அமெரிக்க மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு மேலும் நிதி மற்றும் ஆயுத உதவிகளை அறிவித்த போதும் தனது துருப்புகளை அனுப்புவதில்லை என்ற வோஷிங்டனின் முந்திய முடிவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

காலப் போக்கில் ரஷ்யாவை மிகக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய பொருளாதாரத் தடைகள் பலவற்றையும் அமெரிக்கா அறிவித்திருக்கிறது.ரஷ்யாவோடு கைகோர்த்துப் போரில் இணைந்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் மேலும் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் நேற்றிரவு பிரெசெல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளது தலைவர்கள் மிகநெருக்கடி காலக் கூட்டம் ஒன்றில் ரஷ்யா மீதான கடும் பொருளாதாரத் தடைகளை முடிவுசெய்தனர்.

இந்தக் கூட்டத்துக்கு முன்பாக அதிபர் மக்ரோன் மீண்டும்ஒருதடவை ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் போரில்தாக்கத்தை ஏற்படுத்தவல்ல பதில்கள்எதனையும் புடினிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

அழிவுகளை ஏற்படுத்திய செர்னோபில் அணு மின் ஆலை.

————————————-——————————– –

பாரிஸிலிருந்து குமாரதாஸன். 25-02-2022

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More