இளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , அவருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்களை காவல்துறையினர் கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.
அதேவேளை குறித்த கும்பலால் திருடப்பட்ட நகைகளை அடகு வைத்தமை , விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களின் கீழ் தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் வேளைகளில் , வீட்டில் இருந்தோர் வேலைக்கு செல்கிற சமயம் ஆட்கள் அற்ற வீடுகளை உடைத்து திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
குறித்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இளவாலை காவல் நிலையத்தில் 7 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. அது தொடர்பில் தீவிர விசாரணைகளில் இறங்கிய காவல்துறையினர் காங்கேசன்துறை வறுத்தலைவிளான் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன் அடிப்படையில் ,திருட்டு நகைகளை வாங்கி அடகு வைத்தமை , விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டில் தந்தையையும் மகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து 3 பவுண் நகையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அதேவேளை குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.