வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் , மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும் , வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமான மற்றும் கன மழை கிடைக்க வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலைமைகளின் படி இதன் மிகச் சரியான நகர்வுப் பாதையை கணிக்க முடியாதுள்ளது. எனினும் சில மாதிரிகள் இந்த தாழமுக்கம் வடக்கு மாகாணத்தின் கரையோரத்தினை அணமித்தே நகரும் என காட்டுகின்றன. அவ்வாறாயின் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளும் வேகமான காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழையைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டம் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளை விட சற்று கூடுதலான அளவு மழையைப் பெற வாய்ப்புள்ளது. இலங்கையின் தென்கிழக்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியமாகும்.
விவசாயிகள் குறிப்பாக வெங்காயம் மற்றும் சிறுதானிய செய்கையாளர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை அறுவடை மற்றும் விதைத்தல் செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது சிறந்தது. என தெரிவித்தார்.