வீட்டு திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 700 வீடுகளில் மக்கள் நிரந்தமாக குடியேறாத நிலைமை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
வீட்டு திட்டங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கின்றன. சில நடைமுறை சிக்கல்களும் காணப்படுகின்றன.
வீட்டு திட்டம் வழங்கப்பட வேண்டும் ஆயின் அவர்கள் தங்களின் காணிகளில் குடியேற வேண்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். வீடுகள் இல்லாத காணிகளில் எவ்வாறு தாம் குடியேறுவது என மக்கள் கேட்கின்றனர். இந்த சிக்கல் உள்ளது.
வீட்டு திட்டங்கள் முன்னர் வழங்கப்பட்ட பலர் வீடுகளை தமது காணிகளில் கட்டிவிட்டு அவர்கள் வேறு இடங்களில் வசிக்கின்றார்கள். வீட்டு திட்ட வீடுகளை தங்கள் “விடுமுறை விடுதியாக” பலர் பயன்படுத்துகிறார்கள்.
சுமார் 700 வீடுகளில் மக்கள் நிரந்தமாக குடியேறவில்லை. அதனால் அவர்கள் வீட்டு வளாகங்கள் பற்றை காடாக காட்சி அளிக்கின்றன.
இவ்வாறான நிலையையே ,காணிகளில் குடியேறுபவர்களுக்கே வீட்டு திட்டம் வழங்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
வீட்டு திட்ட வீடுகளில் குடியேறாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
அத்துடன் வீட்டு திட்டத்திற்கு வழங்கப்படும் நிதி போதாமையுள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
தென்னிலங்கையில் வீட்டு திட்டங்களுக்கு 6 இலட்ச ரூபாயே வழங்கப்படுகிறது. இங்கே 10 இலட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. தற்போதைய விலைவாசி அதிகரிப்பு இந்த நிதித்தொகை போதாது என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். அதனால் வீட்டு திட்ட நிதி தொகையே அதிகரிக்க கோரவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.