உலகின் கண்டங்கள் இடையே இணையம் மற்றும் தொலைத் தொடர்பு வலைப்பின்னல்களை இணைக்கும் கேபிள்கள் சமுத்திரங்களின் ஆழத்தில் அங்கும் இங்குமாகக் குறுக்கறுத்துச் செல்கின்றன. உலகின் 99 சதவீதமான “இன்ரநெற்”தொடர்பாடல்கள் இந்த நாரிழைக் கேபிள்களுக்கு (fiber optic cables) ஊடாகவே பரிமாறப்படுகின்றன.
சுமார் 420 கேபிள்கள் 1.3 மில்லியன் கிலோ மீற்றர்கள் நீளத்துக்கு சமுத்திரங்களின் ஆழத்தில் நிறுவப்பட்ட பிளாஸ்ரிக் குழாய்கள் வழியாக உலகை இணைக்கின்றன.அணு வல்லரசுகளிடையே அதிகரித்துவருகின்ற போர் பதற்றம் சக்தி மிக்கநாடுகளிடையிலான சண்டையில் இந்தகடலடி நீர்மூழ்கி கேபிள்களை(submarine cables) போரின் இலக்காக மாற்றிவிடுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரஷ்யா தன் மீது மேற்கு நாடுகள் சரமாரியாக விதித்துள்ள தடைகளுக்குப் பதிலடியாக அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான கடலடி இன்ரநெற் கேபிள்களை இலக்குவைத்துத் தாக்கக் கூடும் என்ற ஒர் எதிர்பார்ப்பு பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் உள்ளது. சமீப நாட்களில் இந்த அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டமை பற்றி செய்திகளும் வெளிவந்துள்ளன.
இரண்டு இணையக் கேபிள்கள் (transatlantic cables) அமைந்துள்ள ஐரிஷ் கடற்பகுதியில் அண்மையில் நீர்மூழ்கிகள் சகிதம் ரஷ்யா நடத்திய போர் ஒத்திகையின் போது கேபிள்கள் வேவு பார்க்கப்பட்டன என்ற சந்தேகம் ஐரோப்பிய புலனாய்வு சேவைகளிடம் எழுந்திருந்தது.
2014 இல் ரஷ்யா கிரிமியாவை ஆக்கிரமித்தபோது இதுபோன்ற ஒரு துண்டிப்புமுயற்சியில் ஈடுபட்டது என்று நம்பப்படுகிறது. அதைவிட விபத்துச் சம்பவத்தால்2007 இல் வியட்நாம் நாட்டின் இணையதொடர்புகள் ஒருவாரம் துண்டிக்கப்படநேர்ந்தது.
மீன்பிடிப் படகு ஒன்று கேபிள்களை அறுத்ததன் விளைவாய் இது நடந்தது. மிக அண்மையில் தொங்கா தீவுக்கூட்டங்களை (Tonga Islands) எரிமலை வெடிப்புத் தாக்கிய போது கடலடித்தள கேபிள்கள் சேதமடைந்து உலகுடனான தொடர்புகள் துண்டித்துப் போயிருந்தன.
ஐரோப்பாவில் மின் துண்டிப்பைப் போன்று ஒரு நொடியில் இன்ரநெற்சேவைகளைத் துண்டிப்பதற்கு ரஷ்யாவால் முடியும். அந்த ஆயுதம் குறித்தஅச்சங்கள் உள்ளன என்பதை ஐரோப்பிய தொலைத்தொடர்பு மற்றும்”இன்ரநெற்”சேவை வழங்குநர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
ஆனால் கேபிள்களை ஓரிடத்தில் மட்டும் தாக்கித் துண்டிப்பதன் மூலம் அதனைச் செய்துவிட முடியாது. நீரடித் தாக்குதல்கள் மூலம் கேபிள்கள் துண்டிக்கப்பட்டால் இணைய சேவைசீர்குலையும். கணனிகள் முதல் ஸ்மார்ட்போன்கள் வரை அனைத்தும் செயலிழக்கும். நமது ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மற்றும் நிதிப்பரிமாற்றங்கள் உட்பட இணையத்தைச் சார்ந்திருக்கும் அனைத்துமே இருட்டடிப்பைச் சந்திக்கும்.
————————————————– —————— –
பாரிஸிலிருந்து குமாரதாஸன். 08-03-2022