வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை ,காவல்துறையினர் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து குறித்த மனைவி பாடசாலை சீருடையுடன் அச்சுவேலி காவல்நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தஞ்சம் அடைந்துள்ளார்.
ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய குறித்த மாணவி , தினமும் தந்தை மதுபோதையில் வந்து தாயாருடன் சண்டை பிடிப்பதாகவும் இதனால் தன்னுடன் ஒவ்வொருநாளும் வாக்குவாதத்திலும் சண்டையிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.
குறித்த மாணவி வீட்டின் மூத்த பிள்ளை எனவும் இவரை விட இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் காவல்துறையினர் மாணவி தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
அதேவேளை தம்மிடம் தஞ்சமடைந்த மாணவியை காவல்துறையினர் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.