சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு இணங்க செயற்படும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நேற்று (16.03) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் நீடிப்பதா, இல்லையா என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்பதாக தெரிவித்த அமைச்சர் வாசுதேவ, தனது இராஜினாமா கடிதத்தை எழுதுவதற்கு ஒரு நிமிடமே எடுக்கும் எனக் குறிப்பிட்ட அவர், தான் இன்னும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக இருப்பதாகவும், தான் அமைச்சர் பதவியை ஏற்கும் வரை நீர் கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
இரட்டைக் குடியுரிமை கொண்ட எவருக்கும் நாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட மாட்டாது என அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய போது எட்டப்பட்ட ஒப்பந்தத்தை அரசாங்கம் மீறியுள்ளது என்று குறிப்பிட்டார்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு உடன்படும் போது வெளிநாட்டு பிரஜாவுரிமை கொண்ட எந்தவொரு நபரையும் நாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கு அல்லது அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் உடன்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும், இந்த விடயத்தின் அடிப்படையில் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தனது பிரஜாவுரிமை தொடர்பில் தமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மாற்றியமைப்பதற்காகவே 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாகவும், அமைச்சர் பசில் ராஜபக்ஷவையோ அல்லது வேறு எந்த நபரையோ பாராளுமன்றத்துக்குக் கொண்டுவருவதற்காக அல்ல என்றும் ஜனாதிபதி உறுதியளித்தாகக் குறிப்பிட்டார்.
எனினும் பல நாட்களுக்குப் பின்னர் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை நாடாளுமன்றத்துக்குள் பிரவேசிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.