உள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் , யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ், மனித உரிமைகள் ஆனணக்குழுவின் வடபிராந்திய இணைப்பாளர் கனகராஜ் ஆகியோரிடம் இந்த ஆவணத்தை மகளிர் சமூகப் பிரதிநிதிகள் கையளித்தனர்.
அதனை தொடர்ந்து இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோரிடமும் ஆவணம் கையளிக்கப்பட்டது.
மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறையும் பெண்களின் பிரதிநிதித்துவமும் உள்ளூராட்சி மன்றங்களின் தரத்தை மேம்படுத்தலும் எனும் தலைப்பில் உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள பெண்கள் வளப்பங்கீடு தொடர்பில் எதிர்கொள்ளும் சவால்கள் அவர்கள் பால் நிலை சார்ந்து எதிர்கொள்ளும் பாரபட்சங்கள் மற்றும் விகிதாசாரமுறை மூலம் அரசியலுக்கு வந்த பெண்களின் அரசியல் ஸ்திரத்தன்மை பற்றிய சமூக பிரதிநிதிகளின் பரிந்துரைகள் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் அபிவிருத்தி நிலையம் சேர்ச் போர் கொமன் கிரவுண்ட் நிறுவனம் ஆகியன இணைந்து ஒழுங்கமைத்த இந்நிகழ்வு கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு செயற்பாடாகும்.