லண்டனின் புறநகர் பகுதியான Ilford Newbury Parkல் இடம்பெற்ற ஒரு கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக லண்டன் பெருநகர காவற்துறை அறிவித்துள்ளது.
ஸ்பிரிங்ஃபீல்ட் டிரைவ், நியூபரிப் பாக் இல்பேர்டில் (Springfield Drive, Ilford.) ஒரு குடியிருப்பு முகவரியில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக இன்று பிற்பகல் (19.03.22) 01:25 மணி அளவில் காவற்துறையினர் அழைக்கப்பட்டனர்.
காவற்துறை அதிகாரிகள், லண்டன் அம்புலன்ஸ் பிரிவினர் உடனடியாக ஸதலத்திற்கு விரைந்து, அவசர சிகிச்சைகள் அளித்த போதும், 30 வயதுடைய அந்த நபரை காப்பற்ற முடியவில்லை எனவும் அவர் சம்பவ இடத்திலேயே மரணித்ததாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதேவேளை இந்தக் கொலை தொடர்பில் இரண்டு ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Met’s Specialist Crime Command இன் துப்பறியும் நிபுணர்கள் விசாரணையை வழிநடத்துகிறார்கள்.
விசாரணைக்கு உதவும் தகவல் தெரிந்தவர்கள், 101 என்ற எண்ணில் காவற்துறையினருக்கு தகவல் வழங்க முடியும். அல்லது @MetCC என்று ருவீட் செய்து CAD466/19Mar ஐ மேற்கோள் காட்டி தகவலை பரிமாற முடியும். அத்துடன், 0800 555 111 என்ற எண்ணில் க்ரைம்ஸ்டாப்பர்ஸ் என்ற சுயாதீன தொண்டு நிறுவனத்திற்கு அநாமதேயமாக தகவலை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளர்கன்வெல் பகுதியிலும் ஒரு பெண் கடும் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
லண்டன் புறநகர் பகுதியான கிளர்கன்வெல்லிலும் ஒரு பெண் கடும் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெருநகர காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமையன்று (19.03.22) 05:10 மணி அளவில், EC1, செபாஸ்டியன் வீதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ஒரு பெண் காயமடைந்ததாக காவற்துறையினர் அழைக்கப்பட்டனர்.
காவற்துறை அதிகாரிகளும் லண்டன் ஆம்புலன்ஸ் பிரிவினரும், பலத்த காயங்களுக்கு உள்ளன நிலையில் இருந்த 19 வயது மதிக்கத்தக்க பெண்ணை மீட்டனர். அவரை காப்பாற்ற அவசர சிகிச்சைப் பிரிவினர் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் சம்பவ இடத்திலேயே மரணித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கான முயற்சிகளும், விசாரணைகளும் தொடர்வதாகவும், பிரேத பரிசோதனை உரிய நேரத்தில் நடத்தப்படும் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை சம்பவ இடத்திற்கு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
Met’s Specialist Crime Command இன் கொலை துப்பறியும் நிபுணர்கள் விசாரணையை வழிநடத்துகிறார்கள்.
காவற்துறையினருக்கு உதவக்கூடிய தகவல் உள்ளவர்கள், 020 8358 1010 என்ற இலக்கத்தில் காவற்துறை நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாற்றாக, 101 ஐ அழைக்கவும் அல்லது @MetCC ஐ ட்வீட் செய்து CAD1252/19March ஐக் குறிப்பிடவும். 0800 555 111 இல் உள்ள க்ரைம்ஸ்டாப்பர்ஸ் என்ற சுயாதீன தொண்டு மூலம் அநாமதேயமாக தகவலை வழங்கலாம் எனவும் காவற்துறை அறிவித்துள்ளது.