யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி காவல்துறையினரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
அந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறும் இடத்தில் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
அதில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பேருந்தில் வருகை தந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகில் வழிமறித்த காவல்துறையினா் , வாகனத்தில் இருந்து எவரையும் இறங்க விடாத வாறு, வாகனத்தின் இரு வாசல்களிலும் காவலுக்கு நிற்கும் நிலையில் , சாரதியை கடுமையான விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
இதேவேளை காவல்துறையினரின் காவலையும் மீறி பேருந்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதியில் அழுது புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை , மத்திய நிலைய பகுதியில் பெருமளவான காவல்துறையினா் , இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.