நகைச்சுவை என்ற பேரில் தனி மனிதஉணர்வுகளைத் தாக்கக் கூடிய கேலிகள் எந்த அளவுக்கு விபரீதமாகிவிடலாம் என்பதனை ஒஸ்கார் விருது விழா மேடையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
உலகப் பெரும் சினிமா விழா மேடையில் ஹொலிவூட் நடிகர் ஒருவர் அறிவிப்பாளரைக் கன்னத்தில் அறைந்த காட்சி உலகெங்கும் சோசல் மீடியாக்களில் வைரலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. 94 ஆவது ஒஸ்கார் சினிமா விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை லொஸ் ஏஞ்சல்சில் கோலாகலமாக நடைபெற்றது.
அமெரிக்காவின் பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ரொக் மேடையில் விழாவைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராகப் பங்கேற்றார். அவரது வழக்கமான நையாண்டிகளில் பார்வையாளர்கள் லயித்திருந்த சமயத்தில் அந்தச் சம்பவம் நடந்தது.
சிறந்த நடிகருக்கான விருது பெற்ற வில்ஸ்மித் (Will Smith) திடீரென எழுந்து சென்று மேடையில் ஏறி அறிவிப்பாளர்கிறிஸ் ரொக்கின் (Chris Rock) கன்னத்தில்பளார் என அறைந்தார்.பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அதனையும் நகைச்சுவைக் காட்சி என்றே நம்பினர்.
அறிவிப்பாளரை அறைந்து விட்டுத் தன்ஆசனத்தில் சென்று அமர்ந்த ஸ்மித்”இனிமேலாவது என் மனைவியின் பெயரை உச்சரிக்காமல் வாயை மூடிக்கொண்டிரு” என்று கத்தியபோது தான் சம்பவத்தின் விபரீதம் ஏனையோருக்குப்புரிந்தது.
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்(Jada Pinkett Smith) அலோபீசியா(alopecia)என்கின்ற தலை முடி முற்றாக உதிர்ந்துபோகின்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மொட்டைத் தலையைக் குறிப்பிட்டு கிண்டல் செய்த கிறிஸ் ரொக் மொட்டைத் தலையுடனான ஒரு பாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் நீண்ட காலம் காத்திருக்கவேண்டி இருக்காது என்று நையாண்டி செய்தார்.
தனது மனைவியின் தலைமுடி உதிர்வதை மேடையில் கிறிஸ் ரொக் பகிரங்கமாக்கிக் கேலி செய்தது வில் ஸ்மித்தை வெகுண்டெழ வைத்தது. உணர்ச்சி வசப்பட்ட அவர் சிரித்து அதனை மறைத்துக் கொண்டே மேடைக்கு ஏறி கிறிஸ் ரொக்கின் கன்னத்தில் பளார் என அறைந்தார்.
அடியை வாங்கிய அறிவிப்பாளர் ரொக்,தன்னைச் சுதாகரித்துக் கொண்டு, “தொலைக்காட்சி வரலாற்றில் இன்றிரவு மிகச் சிறந்த ஒரு நாள்” என்று மட்டும் கூறினார். தாக்குதல் குறித்துப் காவல்துறையில் முறைப்பாடு செய்வதற்கு அவர் மறுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
ஒஸ்கார் வரலாற்றில் கறைபடிந்தது போன்ற இந்தச் சம்பவம் குறித்து அதன் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பூர்வாங்க விசாரணைகளையும் அதுதொடக்கியுள்ளது. வில் ஸ்மித் மீது எத்தகைய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. அவருக்குக் கிடைத்த சிறந்தநடிகருக்கான விருது பறிக்கப்படுமாஎன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.——————————————————————– –
பாரிஸிலிருந்து குமாரதாஸன் 28-03-2022