பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை செல்லும் தமது பயணிகளுக்கு பயண ஆலோசனையை விடுத்துள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மற்றும் சில மருந்துகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளது.
தற்போதைய நிலைமையினால் பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை மின் தடை ஏற்படும் என்பதனால் பயணிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதால் அவசரகாலநிலை மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படலாம் என தெரிவித்து அவுஸ்ரேலியாவும் தமது பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பயணம் இன்மை காரணமாக, மருந்து, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பொருளாதார நிலைமை பாரிய வீழ்ச்சியை எதிர்கொண்டு வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதேநேரம் போராட்டங்கள் மற்றும் பெரிய கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் கனேடிய பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.